தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்: அமலாக்கத்துறையும் களமிறங்கியது
தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம்: அமலாக்கத்துறையும் களமிறங்கியது
UPDATED : ஜூலை 14, 2026 12:16 PM
ADDED : ஜூலை 14, 2026 11:23 AM

சென்னை: தவெக ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை போலீசார் ஒப்படைத்துள்ளனர். இதனை வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணையை துவக்க உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி, த.வெ.க., - எம்எல்ஏ இளையராஜாவுக்கு, 35 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசியது தொடர்பாக, திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பின்னணியில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் இருப்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களின் ஒருவரது வீட்டில் இருந்து, கணக்கில் வராத 60 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜூக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியிருந்தனர். இதனையடுத்து, ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான ஆவணங்களை அவர்களிடம் சென்னை போலீசார் வழங்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் விசாரணையை துரிதப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 பேரிடம் விசாரணை
இதனிடையே, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன் அழைப்புகளின் அடிப்படையில் மேலும் 4 பேரிடம் திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த கணேசன் மற்றும் ரகு உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நேரலை
ஆட்சி கவிழ்ப்பு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை களமிறங்கி உள்ளது குறித்த பின்னணி குறித்து தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனை பார்க்க: https://www.youtube.com/watch?v=YdMz5-CoyLk
