வழக்குகளில் சாதகமாக இருக்கும் அம்சங்களை மட்டுமே பயன்படுத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை
வழக்குகளில் சாதகமாக இருக்கும் அம்சங்களை மட்டுமே பயன்படுத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை
ADDED : அக் 30, 2025 06:08 AM

மதுரை: தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் அவ்வப்போது துறை இயக்குநரால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகளில், தங்களுக்கு சாதகமாக உள்ளவற்றை மட்டும் வழக்குகளில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 33 ஆண்டுகளாக துறை சார்ந்த சுற்றறிக்கைகள் குறித்து இணையதளத்தில் 'அப்டேட்' செய்யப்படாமல் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு துறைகளில் லஞ்சத்தை ஒழிக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயங்குகிறது.
இதன் இயக்குநராக டி.ஜி.பி., அபய்குமார் சிங் உள்ளார். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியபோது செய்த கைது நடவடிக்கை, நிலுவை வழக்குகளின் விபரம், தண்டனை வாங்கி கொடுத்தது என தன் துறை சார்ந்த சாதனைகளை இணையதளத்தில் இந்தாண்டு வரை லஞ்ச ஒழிப்புத்துறை 'அப்டேட்' செய்துள்ளது.
அதே சமயம், பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் சட்ட வழிமுறைகள் குறித்த விபரங்கள் 'அப்டேட்' செய்யப்படவில்லை.
இதனால் ஒவ்வொரு முறையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விபரங்களை கேட்க வேண்டியுள்ளதால் வழக்கு விசாரணைகளில் காலதாமதம் ஏற்படுகிறது என பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:
கடந்த, 1992ல் இத்துறை இயக்குநராக வெங்கட்ராமன் இருந்தார். அவர் அப்போது வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்றில், வழக்கு விபரங்கள், அதற்கான வழிகாட்டுதல்களை ஒளிவுமறைவின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிவிப்பது நம் கடமை என குறிப்பிட்டுள்ளார்.
அந்தாண்டு முதல் இந்தாண்டு வரை, 33 ஆண்டுகளில் துறை இயக்குநராக இருந்தவர்கள் தெரிவித்த அறிவுரைகள், சுற்றறிக்கைகள், சட்ட வாய்ப்புகள் குறித்து எந்த விபரமும் இணையதளத்தில் 'அப்டேட்' செய்யப்படவில்லை. அதேசமயம் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமாக உள்ள விதிகள், சுற்றறிக்கைளை லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டு வருகிறது. அதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கேட்டால், 'தரமுடியாது. அது ரகசியம்' என்கின்றனர்.
இதுதொடர்பான வழக்கில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்டால் தகவல் அளிக்க வேண்டும். மறுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சில விபரங்களை கேட்டால் 'வழக்கு விசாரணை நடப்பதால் ஆவணங்களை தர முடியாது' என லஞ்ச ஒழிப்புத்துறை மறுக்கிறது. 33 ஆண்டுகளாக இந்த நடைமுறையை பின்பற்றுகிறது. அதிகாரிகளின் சுற்றறிக்கை, விதிகள் குறித்து இணையதளத்தில் 'அப்டேட்' செய்தால் தங்கள் விசாரணைக்கு பாதிப்பு வரும் என கருதுவதே காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

