அமைதி பேச்சு நடக்கும்போதே ரஷ்யா - உக்ரைன் இடையே தாக்குதல்
அமைதி பேச்சு நடக்கும்போதே ரஷ்யா - உக்ரைன் இடையே தாக்குதல்
UPDATED : நவ 15, 2026 05:08 AM
ADDED : நவ 15, 2026 05:06 AM

கீவ்: ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பர தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், சமீபத்தில் அபுதாபியில் நடந்த அமைதி பேச்சு தோல்வியில் முடிவடைந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்கா மத்தியஸ்தத்துடன் முத்தரப்பு பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 10 மற்றும் 11ம் தேதிகளில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில், முத்தரப்பு பேச்சு நடந்தது.
இரண்டு நாள் பேச்சைத் தொடர்ந்து, அதில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க பிரிதிநிதிகள் விளக்கினர். அமெரிக்க குழுவின் பயணத்தின்போதே, நேற்று முன்தினம் இரவு ரஷ்யா மீது உக்ரைன் ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பெரும்பாலானவற்றை இடைமறித்து அளித்ததாகவும் ரஷ்யா தெரிவித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் அங்குள்ள குடியிருப்புகள் சேதமடைந்ததுடன், பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
ஒருபுறம் அமைதி பேச்சை தொடர்ந்தாலும், மறுபுறம் பரஸ்பர தாக்குதல்களை இரு தரப்பினரும் மேற்கொண்டு வருவது சமீபத்தில் நடந்த அபுதாபி அமைதி பேச்சு தோல்வியில் முடிந்துவிட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 3,000 வீரர்கள் பலி!
• நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 26,000க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது • குறிப்பாக நவ., 9ல் மட்டும் ஒரே நாளில் 2,980 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது, இந்த ஆண்டில் பதிவான நான்காவது தினசரி சாதனை எண்ணிக்கை என உக்ரைன் தெரிவித்துள்ளது • இது அக்டோபரில் பதிவான 54,400 வீரர்கள் பலி என்ற எண்ணிக்கையை தாண்டி, இந்த மாதத்தின் எண்ணிக்கை ஒரு புதிய சாதனை அளவை எட்டக்கூடும் என கூறப்படுகிறது • பெலாரசை சேர்ந்த உக்ரைன் ஆதரவு ஹேக்கர்கள் குழு ஒன்று, ரஷ்யாவின் அரசு புள்ளி விபர சேவை பதிவுகளை அணுகியதில், 2022 முதல் நடந்து வரும் போரில் இதுவரை 45,000 ரஷ்யர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ கணக்கு இருப்பதை கண்டறிந்துள்ளது • இந்தாண்டு ரஷ்யா, 117 சதுர கி.மீ., நிலப்பரப்பை மட்டுமே கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது • ஆனால், உக்ரைனின் 3,600 சதுர கி.மீ., பரப்பளவை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
