வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும்; பிரதமர் மோடி திட்டவட்டம்
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும்; பிரதமர் மோடி திட்டவட்டம்
UPDATED : டிச 25, 2025 05:17 PM
ADDED : டிச 25, 2025 05:09 PM

லக்னோ: கூட்டு முயற்சியால் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் ரூ.230 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் என்ற பெயரில் தேசிய நினைவிடமும், 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தாமரை வடிவத்தில் ஒரு அதிநவீன அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவிடத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இங்கு, சியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் உள்ளன.
பிரதமர் மோடி பேசியதாவது: ராஷ்ட்ர பிரேர்ண ஸ்தல் நினைவிடம் இந்தியாவின் சுயமரியாதை, ஒற்றுமை மற்றும் சேவைக்கான தொலை நோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது . நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த நாள் அனைவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் கொண்டுவரட்டும்.
வாஜ்பாய் மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்தநாள் இன்று. இந்த இரண்டு தலைவர்களும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தங்கள் அர்ப்பணிப்புப் பணியின் மூலம் நமது நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாத முத்திரைகளைப் பதித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்திக்காக உலகளவில் அறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. பாகுபாடு இல்லாமல் அனைத்து ஏழைகளுக்கும் அரசுத் திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவரின் கூட்டு முயற்சிகளும் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்திய பிரதமரை நான் அன்புடன் வரவேற்கிறேன். நமது பிரதமர் 29 நாடுகளிலிருந்து மிக உயர்ந்த விருதுகளை பெற்றிருப்பது மிகுந்த பெருமைக்குரியது.
இந்த சந்தர்ப்பத்தில், டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி , பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா மற்றும் வாஜ்பாய் ஆகியோரின் சிலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது இந்த நாளை தேசத்திற்கு மிகவும் முக்கியமானதாக ஆக்குகிறது. இன்று பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் பிறந்தநாளும் கூட, அவரது நினைவைப் போற்றும் வகையில் நான் தலை வணங்குகிறேன். இவ்வாறு ராஜ்நாத் பேசினார்.
திறப்பு விழாவிற்குப் பிறகு, பிரதமர் மோடி, மற்ற தலைவர்களுடன் சேர்ந்து, வளாகத்திற்குள் அமைந்துள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அவர், வாஜ்பாய், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரின் வாழ்க்கை மற்றும் பங்களிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட காட்சிப் பொருட்களை பார்வையிட்டார்.

