3 மாதங்களாக நடக்காத கல்வி அலுவலர் கூட்டம் ஆய்வு பணிகளுக்கு மூடுவிழா
3 மாதங்களாக நடக்காத கல்வி அலுவலர் கூட்டம் ஆய்வு பணிகளுக்கு மூடுவிழா
ADDED : அக் 07, 2025 03:08 AM

மதுரை: கல்வித்துறையில் அமைச்சர், செயலர், இயக்குநர்கள் மாதந்தோறும் நடத்தும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் மூன்று மாதங்களாக நடக்கவில்லை. இதனால், சி.இ.ஓ.,க்கள் இல்லாத, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி ஆய்வுப் பணிகள் கேள்விக்குறியாகி உள்ளன.
கல்வி துறையில் ஒவ்வொரு மாதமும் அரசு, உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல், சி.இ.ஓ., - டி.இ.ஓ.,க்களின் பள்ளி ஆய்வுகள், நலத்திட்டங்கள் வழங்கப்பட்ட விபரம், 'எமிஸ்' பதிவுகள் என பல்வேறு தலைப்புகளில் ஆய்வு செய்யும் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் அமைச்சர், இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மாவட்டம் வாரியான கல்வித்துறை செயல்பாடுகளை அந்தந்த சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள் முன்னிலையில் ஆய்வு செய்வர்.
சிறப்பாக செயல்பட்ட சி.இ.ஓ.,க்களுக்கு கேடயம் பரிசு வழங்கப்படும். 'இக்கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்' என, அமைச்சர் மகேஷ் உறுதியளித்தார். ஆனால் மூன்று மாதங்களாக இக்கூட்டம் நடக்கவில்லை.
இதனால் மாவட்ட அளவிலான சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள் பள்ளி ஆய்வுகள் குறைந்து, ஏனோ தானோ என்ற நிலைக்கு மாறிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் கூட்டம் தொடர்ந்து நடத்தியது நல்ல பலன் அளித்தது. அமைச்சர், செயலர், இயக்குநர்கள் நேரடியாக கேள்வி கேட்பரே என நினைத்து, மாவட்ட அளவில் கல்வி அதிகாரிகள் செயல்பாடு தொய்வின்றி நடந்தது.
ஆனால், மூன்று மாதங்களாக இக்கூட்டம் நடக்கவில்லை. அதற்கு பதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு, அகல்விளக்கு, தமிழ் புதல்வன் திட்டம் விழாக்கள் என, கல்வி அதிகாரிகள் முதல்வர், துணை முதல்வரை மையமாக வைத்து, துறை அதிகாரிகள் விழாக்கள் நடத்தி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளை பங்கேற்க உத்தரவிடுகின்றனர்.
இதனால் பள்ளி ஆய்வுகள் செயல்பாடு கேள்விக்குறியாகி விட்டன. இவ்வாறு கூறினர்.