பிரியாவிடை பெற்ற 'மிக் - 21' போர் விமானம்; தேசத்தின் பெருமை என ராணுவ அமைச்சர் புகழாரம்
பிரியாவிடை பெற்ற 'மிக் - 21' போர் விமானம்; தேசத்தின் பெருமை என ராணுவ அமைச்சர் புகழாரம்
UPDATED : செப் 27, 2025 11:13 AM
ADDED : செப் 27, 2025 02:54 AM

சண்டிகர் : “நம் ராணுவத்தில், 62 ஆண்டுகள் சேவையாற்றிய, 'மிக் - 21' ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் உடனான போர்களில் பங்கேற்று, தேசத்திற்கு பெருமை சேர்த்தது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டிஉள்ளார்.
நம் விமானப் படையில், 'ரபேல், சுகோய், மிக், மிராஜ், தேஜஸ்' போர் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. முந்தைய சோவியத் யூனியனில் தயாரிக்கப்பட்ட, 'மிகோயன் - -குரேவிச்' எனப்படும், 'மிக் - 21' ரக போர் விமானங்கள், 1963ல் நம் படையில் இணைக்கப்பட்டது.
வழி அனுப்பு விழா
தற்போது, நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட புதிய விமானங்களுக்கு நம் விமானப் படை மாறுவதை அடுத்து, பழைய மாடல் விமானங்களுக்கு விடை கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, 62 ஆண்டுகளாக பயன் பாட்டில் இருந்த மிக் - 21 போர் விமானத்தின் சேவை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்த விமானம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலை நகரான சண்டிகரில், இந்த விமானத்தின் வழி அனுப்பு விழா நேற்று நடந்தது. இதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைவர் ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப் படைத் தளபதி ஏர் மார்ஷல் ஏ.பி. சிங், கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி உள்பட ஏராளமான ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: மிக் - 21, வெறும் போர் விமானம் மட்டுமல்ல. அவை, நமக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இருக்கும் ஆழமான உறவின் சான்று. நம் விமானப்படை வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த, அதன் சேவை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. சர்வதேச அளவில் ராணுவ விமான போக்குவரத்து வரலாற்றில், எந்த விமானமும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டதில்லை.
உலகளவில், 11,500க்கும் மேற்பட்ட மிக் - 21 ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில், 850 விமானங்கள் நம் விமானப்படையில் சேவையாற்றி உள்ளன. இந்த எண்ணிக்கையே, இந்த போர் விமானத்தின் புகழ், நம்பகத்தன்மை மற்றும் பல பரிமாண திறன்களுக்கு சான்றாக உள்ளன. நம் அண்டை நாடான பாகிஸ்தான் உடனான போர்களில், இந்த போர் விமானங்கள் சிறப்பாக பணியாற்றின.
உரிய மரியாதை அந்நாட்டுடன் 1965 மற்றும் 1971ம் ஆண்டுகளில் நடந்த போரிலும், 1999ல் நடந்த கார்கில் மோதலிலும், 2019ல் நடந்த பாலகோட் வான்வழி தாக்குதல்களிலும், மிக் - 21 முக்கிய பங்காற்றியது. சமீபத்தில் நடந்த, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையிலும், இந்த போர் விமானங்க ள் சிறந்த முறையில் செயல்பட்டன.
நம் நாகரிகமும், கலாசாரமும் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, நம் வாழ்வில் பங்களித்த அனைத்து விஷயங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என கற்பிக்கின்றன. அந்த வகையில், இந்திய படைகளில் சிறந்த பங்காற்றிய மிக் - 21 போர் விமானங்கள் உரிய மரியாதையுடன் வழி அனுப்பப்படுகின்றன. மிக் - 21, நம் தேசத்தின் பெருமை. அது நம் பாதுகாப்பு கேடயமாகவும், நம் வலிமையின் அடையாளமாகவும் விளங்கியது.
நம் வீரர்கள் ஓய்வு பெறும்போது அவர்களை கவுரவி ப்பதுபோ ல, 60 ஆண்டுகளுக்கும் மேலாக நம் பாதுகாப்பின் சுமையை தன் இறக்கைகளில் சுமந்த இந்த விமானங்களை, இன்று நாம் கவுரவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.