ADDED : டிச 28, 2025 03:05 AM

மும்பை: ராஜ்யசபாவில், மாநில கட்சிகளின் எம்.பி.,க்கள் எண்ணிக்கை குறைந்தபடியே வருகிறது. அடுத்த இரு ஆண்டுகளில், சில மாநில கட்சிகளின் எம்.பி.,க்கள் ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவதே கஷ்டம். உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவுக்கு இரண்டு ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ளனர். இதில் ஒருவரான பிரியங்கா சதுர்வேதியின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஏப்ரலிலும், இன்னொரு எம்.பி., சஞ்சய் ராவத்தின் பதவிக்காலம், 2028 ஜூலையிலும் முடிகிறது. இவர்களுக்கு பின், இந்த கட்சியிலிருந்து யாரும் ராஜ்யசபாவுக்கு வர முடியாது. காரணம், மஹாராஷ்டிரா சட்டசபையில் இந்த கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.,க்கள் இல்லை.
இதே போல, மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு தற்போது ஒரேயொரு ராஜ்யசபா எம்.பி., மட்டுமே உள்ளார். அவரது பதவிக்காலம், 2026 நவம்பரில் முடிகிறது. இவரும் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாக முடியாது. காரணம், உ.பி., சட்டசபையில் பகுஜன் சமாஜுக்கு போதிய எம்.எல்.ஏ.,க்கள் இல்லை.
ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு ராஜ்யசபாவில் ஒரு எம்.பி., கூட கிடையாது. அ.தி.மு.க.,வுக்கு நான்கு ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ளனர்; 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, ராஜ்யசபாவுக்கு மீண்டும் எம்.பி.,க்களை அனுப்ப முடியும்.
மற்ற மாநில கட்சிகளான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, இடதுசாரிகளின் நிலையும் இது தான். 'இண்டி' கூட்டணிக்கு ராஜ்யசபாவில், 80 எம்.பி.,க்கள் இருக்கின்றனர். இதில் காங்கிரசுக்கு 27 எம்.பி.,க்கள் உள்ளனர். ஆனால், வரும் ஆண்டுகளில் காங்., - எம்.பி.,க்களின் எண்ணிக்கையும் குறையும்.
பா.ஜ., கூட்டணியில், 133 எம்.பி.,க்கள் உள்ளனர். இதில் பா.ஜ., - எம்.பி.,க்கள் 103 பேர்; நியமன எம்.பி.,க்கள் ஏழு பேர் அடங்குவர். வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். காரணம், பல மாநிலங்களில் பா.ஜ., தான் ஆட்சியில் உள்ளது.
'காங்., இல்லாத பாரதம்' என, சொல்லி வருகிறார் மோடி. இந்த நிலையை பார்த்தால், 'மாநில கட்சிகள் இல்லாத பாரதம்' என்றாகி விடும் போலிருக்கிறது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், ராஜ்யசபாவின் தலைவராக இருந்து, மாநில கட்சி எம்.பி.,க்கள் பேச அதிக நேரம் ஒதுக்குகிறார் என்பது மட்டுமே, மாநில கட்சிகளுக்கு ஒரு சாதகமான அம்சம்.

