தினமும் மூன்றரை மணி நேரம் மட்டுமே உறங்கும் பிரதமர்
தினமும் மூன்றரை மணி நேரம் மட்டுமே உறங்கும் பிரதமர்
ADDED : டிச 14, 2025 05:19 AM

புதுடில்லி: அ னை த்து தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களையும், இரவு விருந்திற்காக, இரண்டு நாட்களுக்கு முன் தன் வீட்டிற்கு அழைத்திருந்தார் பிரதமர் மோடி. எம்.பி.,க்கள் பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். வட்ட மேஜைகள் அமைக்கப்பட்டு, எம்.பி.,க்களுக்கு உணவு பரிமாறப்பட்டது .
எம்.பி.,க்கள் இருக்கும் இடத்திற்கே சென்று, ஒன்றரை மணி நேரம் அவர்களுடன் செலவிட்டாராம் மோடி. 'உங்களுடைய தாய்மொழி குஜராத்தி... அப்படியிருக்க எப்படி பிரமாதமாக ஹிந்தி பேசுகிறீர்கள்?' என, ஒரு எம்.பி., கேட்டாராம். 'குஜராத்தின் மேசானா ரயில் நிலையத்தில் பணியாற்றியபோது, அங்கு ஹிந்தி பேசத்தெரிந்த ஆடு,- மாடு மேய்ப்பவர்களுடன் தொடர்பில் இருந்தேன். அவர்களிடம் இருந்து ஹிந்தி கற்றுக் கொண்டேன்' என தெரிவித்தார்.
முதல் முறையாக தேர்தெடுக்கப்பட்ட இளம் எம்.பி.,க்களுடன் அதிக நேரம் செலவிட்டுள்ளார் மோடி. அவர்களுக்கு ஆலோசனைகளையும் அளித்துள்ளார். 'எப்படி நீங்கள் டென்ஷனைத் தாங்குகிறீர்கள்' என பல எம்.பி.,க்கள் கேட்டனர். 'எது குறித்தும் நான் டென்ஷன் ஆவதே இல்லை. அவ்வாறு ஆகும் விஷயங்களை, ஒரு தாளில் எழுதி வைத்துக்கொள்வேன்; அது தான் நெருக்கடியை நீக்குகிறது. இதுதான் என் தாரக மந்திரம்' என்றாராம்.
'குஜராத் முதல்வராக இருந்த போது, குண்டு வெடிப்பு நடந்தது. அங்கு நீங்கள் போக வேண்டாம் என அதிகாரிகள் கூறினர். ஆனால், அதை மீறி அங்கு சென்றேன். சரியான முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். அதே சமயம், நீங்கள் எடுக்கும் முடிவிற்கு நீங்கள்தான் பொறுப்பேற்கவும் வேண்டும்' என, எம்.பி.,க்களுக்கு ஆலோசனை அளித்தார் மோடி.
'அதிகாரிகள் மீது உங்களுக்கு கோபமே வராதா' என, ஒரு இளம் எம்.பி., கேட்க, 'சில விஷயங்கள் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். ஆனால், அதை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள் என்பது மிக முக்கியம். அதிகாரிகளிடம் நான் கோபித்துக் கொண்டதே இல்லை. கோபம் வந்தால், அது எந்த விஷயத்திற்காக வந்தது என, ஒரு தாளில் எழுதி வைத்துக் கொள்வேன். இந்த செயல் தான், என் கோபத்தை குறைக்க உதவுகிறது' என்றாராம்.
'இப்படி தான் எப்போதுமே உற்சாகமாக பணியாற்றுகிறேன்' என, எம்.பி.,க்களிடம் கூறிய மோடி, 'ஒரு நாளில் வெறும் மூன்றரை மணி நேரம் தான் துாங்குகிறேன்' எனக்கூறி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாராம்.

