நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விண்வெளித்துறை: இஸ்ரோ தலைவர் பெருமிதம்
நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விண்வெளித்துறை: இஸ்ரோ தலைவர் பெருமிதம்
ADDED : டிச 11, 2025 11:55 AM

திருநெல்வேலி: இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களைப் பற்றி அதன் தலைவர் நாராயணன் விளக்கமாக கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது: ககன்யான் திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்திய ராக்கெட்டில் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பி பத்திரமாக திரும்பக் கொண்டு வருவது தான். இதற்கான ராக்கெட் தயாரிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.
விண்வெளியில் ஆக்சிஜன், வெப்பநிலை, அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு அமைப்பு (ECLSS) சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ராக்கெட் சிக்கலின் போது வீரர்களை மீட்கும் குழு வெளியேறும் அமைப்பு (CES) வெற்றிகரமாக சோதனை முடித்துள்ளது. இதற்காக ஏற்கனவே 8,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மனிதர்களை ஏற்றிய ககன்யான் விண்கலம், 2027ம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்படும். அதற்கு முன் ஆட்கள் இல்லாத மூன்று ராக்கெட்டுகள் சோதனையாக ஏவப்படும். இந்திய விண்வெளி நிலையம் (Bharatiya Antariksha Station) பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாகும்.
மொத்தம் ஐந்து தொகுதிகளாக அமைக்கப்படும் இந்த நிலையத்தின் முதல் தொகுதி 2028ல் விண்ணுக்கு அனுப்பப்படும். 2035ம் ஆண்டுக்குள் விண்வெளி நிலையம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
2023ல் பிரதமர் அடிக்கல் நாட்டிய இத்திட்டம் இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக உருவாகிறது. இது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்த முக்கிய மையமாகும். இந்த ஏவுதளம் 2027 தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும். இது தமிழகத்துகானதாக அல்லாமல் இந்தியாவுக்கான பெருமை.
சந்திரயான்-4 திட்டம் நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டுவரும் நோக்குடன் நடைபெறுகிறது. இஸ்ரோவின் முயற்சிகள் நாடு பாதுகாப்பிலும், சாதாரண மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்திய விண்வெளித் துறை உலகளவில் பெருமை சேர்த்துள்ளது. இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

