12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை: மத்திய அரசு கொடுத்தும் தமிழகம் அலட்சியம்
12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை: மத்திய அரசு கொடுத்தும் தமிழகம் அலட்சியம்
ADDED : நவ 09, 2025 12:24 AM

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் வழங்க, இம்மாதம் 8,722 டன் கோதுமையை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் செய்த தாமதத்தால், 12,753 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை.
ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில், கோதுமையை இலவசமாக வாங்கலாம்; இதை, மத்திய அரசு வழங்குகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் வரை, 17,100 டன் கோதுமை வழங்கப்பட்ட நிலையில், மார்ச் முதல் 8,576 டன் கோதுமை ஒதுக்கப்படுகிறது. அதற்கு ஏற்ப, கார்டுதாரருக்கு தலா, 1 - 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கார்டுதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களின் விபரத்தை, மாத இறுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை தெரிவிக்கிறது. அதற்கு ஏற்ப, 36,000த்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும்.
இந்த பணியில் வாணிப கழகம் தாமதம் செய்வதால், கடைகளில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதன்படி, இம்மாதத்திற்கு 8,722 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இரு வாரமாகியும் முழு அளவில் கோதுமை அனுப்பப்படவில்லை. இதனால், 12,753 கடைகளில் கோதுமை இல்லாததால், கார்டுதாரர்களுக்கு வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருக்கு, உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு, நேற்று முன்தினம் அனுப்பியுள்ள கடிதம்:
இம்மாதத்திற்கு, 8,722 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், 6ம் தேதி நிலவரப்படி, 12,753 கடைகளில் கோதுமை இருப்பு இல்லை; இது, மிகவும் வருந்தத்தக்கது. மேலும், கோதுமை ஒதுக்கீட்டில், 50 சதவீதம் மட்டுமே இதுவரை அனுப்பப்பட்டுஉள்ளது.
இந்நிலை தொடருமானால், கோதுமை கிடைக்காத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கார்டுதாரர்களுக்கு கோதுமை தங்கு தடையின்றி கிடைக்க, வாணிப கழக கிடங்குகளில் இருந்து, அனைத்து ரேஷன் கடைகளுக்கும், நாளைக்குள் 100 சதவீத கோதுமை அனுப்ப வேண்டும்.
அனைத்து கடைகளுக்கும் கோதுமை அனுப்பப்படுவதை, கூட்டுறவு மாவட்ட இணை பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

