திருப்பரங்குன்றம் விவகாரம்: நாளை வெளியாகிறது தீர்ப்பு
திருப்பரங்குன்றம் விவகாரம்: நாளை வெளியாகிறது தீர்ப்பு
ADDED : ஜன 05, 2026 11:55 AM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிக்குமார், 'திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் துாணில் (தர்காவிலிருந்து 15 மீ., தொலைவில்) கார்த்திகை தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார். இதுபோல் பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன் மனு செய்தனர். இவற்றை டிச.1ல் அனுமதித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'வழக்கமான இடங்களைத் தவிர, தீபத்துாணிலும் கார்த்திகை தீபத்தை கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்,' என உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில், கோயில் நிர்வாகம் சார்பில் மேலமுறையீடு செய்யப்பட்டது. இம்மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர்.
இதனிடையே, 'மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கந்துாரி விழா நடத்த தடை கோரிய வழக்கில் சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டும் தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும். விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலியிடக்கூடாது. விலங்கு இறைச்சியை எடுத்துச் செல்லக்கூடாது. அசைவ உணவு சமைக்கக்கூடாது. எந்தவொரு அசைவ உணவையும் எடுத்துச் செல்லக்கூடாது. இந்த உத்தரவை மலையின் அடிவாரம் முதல் உச்சிவரை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தர்கா நிர்வாகம் முறையிட்டது. இதை இன்று விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்றம்,இந்த விவகாரம் குறித்து தீபத்தூண் வழக்கில் விவாதிக்கப்படும் எனவும், தர்கா நிர்வாகம் மனு நாளை விசாரிக்கப்படும் என்றனர்.

