திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை
திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற கிளை
UPDATED : டிச 18, 2025 10:59 PM
ADDED : டிச 18, 2025 04:45 PM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது.
5வது நாள்
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய இரு நீதிபதிகள் அமர்வில் இன்று (டிச.,18) 5 வது நாளாக நடந்தது.
மனுதாரர்கள் ராம ரவிக்குமார், பரமசிவம், அரசு பாண்டி, கார்த்திகேயன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.ஸ்ரீராம், வள்ளியப்பன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா ஆஜராகினர்.
விரும்பவில்லை
இன்றைய விசாரணையின் போது அட்டர்னி ஜெனரல் அட்டர்னி ஜெனரல் ராமன் வாதாடியதாவது: தனி நீதிபதி அல்லது இந்த அமர்வு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், ' தீபத்தூண்' குறித்து தோற்றம் மற்றும் அமைப்பு தொடர்பான எந்தவொரு உறுதியான தரவுகளோ அல்லது ஆதாரமோ கிடைக்கவில்லை.
இந்த விஷயத்தில் ஏற்கனவே ஒரு பாரபட்சமான மனப்பான்மை நிலவுவதாக மனுதாரர்கள் கருதுகின்றனர். தீபத்தூண் என்னவென்று இன்னும் உறுதியாக தெரியாததால், இந்த விஷயத்தில் மாநில அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்க விரும்பவில்லை. தீபத்தூண் பிரச்னை எழுவதற்கு முன்பே, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல் தூண்களின் முக்கியத்துவத்தை சரி பார்க்கும் நோக்கத்துடன் அரசின் கீழ் உள்ள நில அளவைத்துறை நடவடிக்கை துவங்கியுள்ளது.
தற்போதைக்கு அந்தத் தூண் எப்போது நிறுவப்பட்டது என்பதை அறிவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. முழுமையான விசாரணைக்குப் பிறகே தரவுகள் கிடைக்கும்.
1920 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், மாவட்ட நீதிபதி மலையையே ஆய்வு செய்ததாகவும், மலையின் உச்சியில் உள்ள ஒரே கட்டடம் தர்ஹா மட்டுமே என்று சில கண்டுபிடிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது எனக்கூறி அட்டர்னி ஜெனரல் அந்த உத்தரவை படித்துக் காட்டினார். அந்த உத்தரவில், குன்றின் உச்சியில் உள்ள படிக்கட்டுகளுக்கு மேலே இருக்கும் ஒரே புனித இடம் அந்த தர்ஹாவும் அது தொடர்புடைய கட்டடங்களும் தான் எனக்கூறினார்.
தகவல் இல்லை
தொடர்ந்து பிஎஸ் ராமன வாதாடியதாவது: முன்பே தீபத்தூண் இருந்து இருந்தால் ,1920 ல் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு இருப்பார். தற்போது அந்த தீபத்தூண் என்றால்என்ன. அது எப்போது என்ன நோக்கத்திற்காக நிறுவப்பட்டது என்று சொல்வதற்கு எந்தத் தகவலும் இல்லை.
தீபத்தூணில் விளக்கு ஏற்றுமாறு கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட முடியுமா என்பது தான் தனி நீதிபதி முன்பு இருந்த ஒரே கேள்வி.தனி நீதிபதி தனது உத்தரவில் 1945 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பைக் குறிப்பிட்டார். அதில், கோயிலின் ஒவ்வொரு பக்தருக்கும் வழக்கமான திருவிழாக்களை வழக்கமான முறையில் நடத்துவதற்கும், அதில் வழக்கமான முறையில் பங்கேற்பதற்கும் அடிப்படை உரிமை உண்டு என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.
கோவில் நிர்வாகம் செயல்படும் விதத்தில் அதற்கு ஒரு சட்டப்பூர்வ கடமை உள்ளது என்ற முடிவுக்கு வருவதில் எனக்கு எந்தச் சிரமமும் இல்லை.பாரம்பரியம் குறித்து தீர்மானிக்க கோவில் செயல் அலுவலருக்கு என்ன அதிகாரம் உள்ளது என கேட்கிறார்கள். அதற்கு வாரியம் தான் முடிவெடுத்து இருக்க வேண்டும். அவர்கள் ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால், வேறு வழிகள்உள்ளன. தவறான நபரிடம் தவறான கேள்வியை கேட்டால் எல்லாம் மாறிவிடும்.இந்த வழக்கை சிவில் வழக்குக்கு அனுப்பக்கூடாது என்ற மனுதாரர்களின் கருத்துடன் உடன்படுகிறேன். ஆனால்,அது சிவில் வழக்கு அல்ல என்பதற்காக அல்ல. மாறாக அதற்கான தீர்வு ஹிந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு 63ல் உள்ளது.
அவர்கள் செய்ய வேண்டியதுஎல்லாம் தற்போதைய நடைமுறையைப் பின்பற்றுவது மட்டுமே. அதில் இருந்து அவர்கள் தவறினால், 1945 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பொருந்தும். மேலும் சிவில் உரிமை உள்ளது.தேவையான வழிகாட்டுதல்கை ளவழங்கலாம் என நீதிபதிகள் கூறலாம்.
சரியல்ல
ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி, ஒரு மத அமைப்பின் நிறுவப்பட்ட நடைமுறைகளை தீர்மானிக்கும் அதிகாரம் இணை கமிஷனர் அல்லது உதவி கமிஷனருக்கே உள்ளது. மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், ஹிந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தின் பிரிவு s63ன் கீழ் அந்த மனுவை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.s63 சட்டப்பிரிவானது மாற்றுத்தீர்வு அல்ல. அதுவே சரியான தீர்வு.
ஆபத்து அடிப்படையில் செயல் அலுவலர் மனுவை நிராகரித்து விட்டதாக மனுதாரர்கள் கூறுவது சரியல்ல. ஏற்கனவே, ஒரு வழக்கம் உள்ளது. நல்லிணக்கத்தின் மற்றும் அமைதியான திருவிழா நடைபெறுவதற்காக நான் தற்போதுள்ள வழக்கத்தை தொடர்வேன் என்றும் செயல் அலுவலர் கூறினார். தேவையான அனைத்து பாதுகாப்புஏற்பாடுகளுடன் அதே இடத்தில் விளக்கு ஏற்றுவதை நான் உறுதி செய்வேன் என தெரிவித்தார்.
தற்போதுள்ள வழக்கம் குறித்து இந்த மேல்முறையீட்டில் இந்த நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம் அல்ல. அது உரிய முறையில் தீர்ப்பளிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது தொடர்பான பிரச்னை அல்ல. மாறாக நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் 226வது பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியுமா என்பது பற்றியது.
அனைத்து ரிட் மனுதாரர்களும் முன்வைக்கப்பட்ட ஒரு வாதம் என்னவென்றால்,மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவதே பொருத்தமான இடம் என்பதும், சிலரை மட்டும் ஏற்ற அனுமதிப்பதால், மற்றவர்களின் உரிமைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய அவர்களின் அடுத்த வாதமும் ஆகும்.
தெரியாது
100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மலை இருந்து வருகிறது. இது திடீரென்று தோன்றவில்லை. இத்தனை ஆண்டுகளாக உச்சிப் பிள்ளையார் கோயில் தான் விளக்கு ஏற்றுவதற்கு பொருத்தமானது என்று கோயில் பக்தர்கள் நினைத்து இருந்தால், நாம் எப்படி 2025 டிசம்பரில் அமர்ந்து தீபத்தூண்தான் மிகவும் பொருத்தமானது என்று சொல்ல முடியும்.
திருவண்ணாமலையில் 5 அல்லத 10 பேர் சென்று விளக்கு ஏற்றுவதாக அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள். தீபம் ஏற்றப்பட்டவுடன் ஒவ்வொரு பக்தரும் மேலே செல்லலாம் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அது உண்மையா என எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் தனது வாதத்தை முடித்தார்.
கேள்வி
வழக்கறிஞர் ஸ்ரீராம்: தற்போதைய மனுக்களை இந்த நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஒரு தடையாக, 2014 ம் ஆண்டு வழக்கை அரசு தலைமை வழக்கறிஞர் முன்வைத்தார். அந்த வழக்கில் பக்தர் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அரசு வழக்கறிஞர் ஏற்கனவே அந்த நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டு விட்டார். ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு குறித்தே கேள்வி.
இது ஒரு வழக்கமாக இருந்ததா இல்லையா என்பது குறித்த சர்ச்சை பற்றிய பிரச்னை அல்ல. உச்சிப் பிள்ளையார் கோயிலில் விளக்கேற்றுவது மட்டும் தான் ஒரே வழக்கமா என்பது தான் கேள்வி. இந்த ஒரு வழக்கத்தை மீண்டும் உயிர்பிப்பதா அல்லது மீட்டெடுப்பதா என்பது பற்றியது
1920 ம்ஆண்டு உத்தரவில் விவாதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் பின்னணியில் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கோவில் நிர்வாகம் செய்த ஒரே சலுகை அடிப்படையிலான பின்வாங்கல் தான் உச்சிப்பிள்ளையார் கோவிலில் விளக்கு ஏற்றுவது. செயல் அலுவலர் தனது நிலைப்பாட்டை மனுக்களில் ஏற்கனவே தெளிவபடுத்திவிட்டதால் ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு பிரிவு63 ன் கீழ் நடக்கும் நடவடிக்கைகள் பொருத்தமற்றதாக இருக்கலாம் எனக்கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார். எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனக்கோரிக்கை வைத்தார்.
ஏன் தடுக்க வேண்டும்
மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன்: தன்னால் முடிவெடுக்க முடியாது. என்று கோயில் செயல் அலுவலர் கூறவில்லை. அதை அவர் நிராகரித்துவிட்டார். அரசு வழக்கறிஞர் எந்த நைலைப்பாட்டையும் எடுக்கவில்லை. மாறாக மாவட்ட கலெக்டருக்காக ஆஜராகிறார். ஒரு மதசார்பற்ற அரசு, மதங்களை பற்றி எவ்வளவு பேச முடியும்.
அவர்கள் சிக்கந்தர் தர்காவில் விளக்குகளை ஏற்றுகிறார்கள். சூபி கலாசாரம் அதற்கு அனுமதிக்கிறது. அவர்கள் மதசார்பற்றவர்கள். அதனால், தீபத்தூணில் விளக்கேற்றுவதை ஏன் தடுக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. என அவர் தனது வாதங்களை முன்வைத்தார்.
பக்தர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பழனிவேல் ராஜன், புத்தகங்களில் இருந்து மேற்கோள் காட்டி தனது வாதங்களை முன்வைத்தார். இந்த தீபத்தூண் என்பது ஏதோ ஒரு புதிய கருத்து அல்ல.என்ன செய்ய வேண்டும் என நீதிபதிமுடிவு செய்திருக்கக்கூடாது என அவர்கள் வாதம் வைக்கின்றனர்.
அந்த மனுவில் உள்ள கோரிக்கையை பார்த்தால்,' நீதிமன்றம் பொருத்தமானதாக கருதும் வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம்' என்பது. இது எல்லா மனுக்களிலும் உள்ள ஒரு பொதுவான கோரிக்கையாரும் அங்கு செல்லாமல் நீண்ட காலத்துக்கு எதுவும் நடக்காமல் இருந்தால், தானாகவே அவர்கள் அந்த சொத்தின் மீதும் உரிமை கோரத் துவங்கிவிடார்கள் ஏற்கனவே சமணக் குகைகளுக்கு பச்சை நிறம் பூசப்பட்டு இருந்தது. புகார் எழுந்த பிறகு அது அகற்றப்பட்டது. என்று அவர் தனது வாதத்தை முடித்தார்.

