ADDED : செப் 27, 2025 07:22 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (செப் 26) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலருக்கு தண்டனைகளையும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
சிறுமிக்கு பாலியல் தொல்லை
விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்தவர் ராஜ் 74. இவர் பெட்டிக்கடை நடத்தி வந்தார். 2024 ல் இவரது கடைக்கு வந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் டவுன் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.
இதில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக மாவட்ட நிர்வாகம் வழங்க கலெக்டருக்கு பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் முத்துமாரி ஆஜரானார்.
கபடி பயிற்சியாளருக்கு சிறை
சூலுார் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் அருண்குமார், 38. கபடி மற்றும் சிலம்ப பயிற்சி அளிக்கும் அகாடமி நடத்துகிறார். அரசு பள்ளி மாணவியர் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றனர். சில தினங்களுக்கு முன், அரசு பள்ளி ஒன்றில், மாணவியர் இரு குழுவாக பிரிந்து தகராறில் ஈடுபட்டனர். அவர்களிடம் தலைமையாசிரியர் விசாரித்தபோது, சில மாணவியருக்கு அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதுதொடர்பாக மாணவியருக்கு இடையே தகராறு நடந்ததும் தெரிந்தது.
'சைல்ட் லைன்' அமைப்புக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசாரும், 'சைல்ட் லைன்' அமைப்பினரும் நடத்திய விசாரணையில், மாணவியரின் புகார் உண்மை என தெரிந்தது. அருண்குமார் மீது சூலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தில், வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
டிராவல்ஸ் ஏஜன்ட் கைது
கோவை மாவட்டம், வடமதுரையை சேர்ந்த 22 வயது பெண், தடாகம் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன், ரோட்டோரத்தில் பேசிக்கொண்டிருந்தனர். குனியமுத்துாரை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜன்ட் அருண்பரத்,41 என்பவர், அப்பெண்ணை மொபைல் போனில் போட்டோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்தார்.
அந்த பெண் கூச்சலிடவே, நண்பர்கள் தட்டிக்கேட்டனர். அவர்களை அருண்பரத் தாக்கிவிட்டு தப்பினார். படுகாயமடைந்த அந்த பெண்ணை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் அருண் பரத்தை கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
சிங்கம்புணரியில் 16 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் பேக்கரி ஊழியர் அஜித்குமாருக்கு 32, இருபது ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிங்கம்புணரி வடக்கு வளவில் உள்ள செட்டியார் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அங்குள்ள பேக்கரியில் பணிபுரிந்தார்.
2020ம் ஆண்டு டிசம்பரில் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி பழகி வந்தார். அச்சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததில் சிறுமி கர்ப்பமானார். அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் சிங்கம்புணரி போலீசார் கைது செய்தனர். சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் வழக்கை விசாரித்தார்.
சிறுமி கடத்தலுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.500 அபராதம், சிறுமி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 5ஆண்டு சிறை, ரூ.500 அபராதம், பாலியல் தொல்லைக்கு 20 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம், கர்ப்பம் அடைய செய்ததற்கு20 ஆண்டு சிறை, ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இத்தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் அஜித்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சிறுமி உயிரிழந்ததால் அவரது பெற்றோருக்கு அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.