ADDED : ஜூலை 22, 2026 06:05 AM

மின் இணைப்புக்கு ரூ.2000 வாங்கிய வயர்மேன் கைது
திருநெல்வேலி: தென்காசி அருகே வீட்டு மின் இணைப்பு வழங்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வயர்மேன் ஆறுமுகச்சாமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் புன்னையாபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் 37, வயரிங் காண்ட்ராக்டராக உள்ளார். இவர் தென்காசி மேட்டுத்தெரு நாகராஜனின் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற விண்ணப்பித்திருந்தார். இதற்கான கட்டணமாக ரூ.13,725 மற்றும் ரூ.27,660 ஆகிய தொகைகளை ஆன்லைனில் செலுத்தினார். மின் கம்பம் நடும் பணி உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தன.
இதையடுத்து மின் மீட்டர் பொருத்துவதற்கு தென்காசி மின்வாரிய அலுவலக வயர்மேன் ஆறுமுகச்சாமி 53, ரூ.2000 லஞ்சம் கேட்டார். பணம் கொடுத்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சண்முகசுந்தரம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., பால் சுதர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனப்பவுடர் தடவிய ரூ.2000 -ஐ சண்முகசுந்தரத்திடம் கொடுத்து அனுப்பினர். திட்டமிட்டபடி நேற்று வயர்மேன் ஆறுமுகச்சாமி அவரிடம் லஞ்சப் பணத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
லஞ்சம் கேட்ட உதவி சப் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் மீது வழக்கு
புதுச்சேரி: நில ஆவணத்தை வாங்கி தர ரூ.1,000 லஞ்சம் கேட்ட உதவி சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ஆகாஷ்,23; இவரது மனைவி சிவசங்கரி. சிவசங்கரி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வந்தவர். இவருக்கு பூர்வீக சொத்து இருப்பதும், அதற்கான ஆவணங்களை அவரது சித்தப்பாவான வில்லியனுாரை சேர்ந்த குமாரவேலிடம் இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் ஆகாஷ், தனது மனைவி சிவசங்கரிக்கு சொந்தமான நிலத்தின் ஆவணங்களை குமாரவேலுவிடம் இருந்து வாங்கி தர வேண்டி வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின், போலீஸ்காரர் கண்ணரசு ஆகியோர் குமாரவேலுவை அழைத்து விசாரித்து, நிலத்தின் ஆவணத்தின் நகலை வாங்கி ஆகாஷிடம், ரூ.1,500 வாங்கிக் கொண்டு கொடுத்தனர்.
அதனை பெற்ற ஆகாஷ், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கம் எடுத்து பார்த்தபோது, சிவசங்கரியின் அப்பா பெயரில் ஒரு நிலம் இருப்பது தெரிய வந்தது. அந்த ஆவணத்தை ஆகாஷ், குமாரவேலுவிடம் கேட்டார். அதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து குமாரவேலு, ஆகாஷ் தன்னை மிரட்டுவதாக வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், உதவி சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின், போலீஸ்காரர் கண்ணரசு ஆகியோர் புகார் கொடுத்த குமாரவேலு மற்றும் ஆகாஷ் ஆகிய இருதரப்பினரையும் மீண்டும் அழைத்து விசாரித்தனர். பின்னர், குமாரவேலுவிடம் இருந்து கூடுதல் நில ஆவணத்தை வாங்கிய போலீசார், இதுகுறித்து ஆகாஷிற்கு போனில் தகவல் தெரிவித்து, நேரில் வந்து ரூ.1,000 பணத்தை கொடுத்துவிட்டு நில ஆவணத்தை வாங்கிச் செல்லுமாறு கூறினார்.
இதுகுறித்து ஆகாஷ் கடந்த 17 ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுசன்யா உத்தரவின் பேரில், எஸ்.பி., நல்லாம்பாபு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார், ஆகாஷிடம் லஞ்சம் கேட்ட உதவி சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின், போலீஸ்காரர் கண்ணரசு ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
