UPDATED : மே 15, 2026 12:22 AM
ADDED : மே 14, 2026 11:27 PM

தர்மசாலா: பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், மும்பை அணி 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று தர்மசாலாவில் நடந்த போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. மும்பை அணி கேப்டன் பும்ரா, 'டாஸ்' வென்று பீல்டிங் தேர்வு செய்தார். ஏற்கனவே 'பிளே ஆப்' வாய்ப்பை இழந்த நிலையில், மும்பை அணியில் சூர்யகுமார், கசன்பர் நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர், ரூதர்போர்டு இடம் பெற்றனர்.
நல்ல துவக்கம்
பஞ்சாப் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா (22), பிரப்சிம்ரன் சிங் ஜோடி துவக்கம் கொடுத்தது. 'பவர் பிளே' ஓவர்களில் (முதல் 6), பஞ்சாப் அணி ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. பின் வந்த கொனாலி, முதல் சிக்சரை (7.4வது ஓவர்) அடித்தார். பிரப்சிம்ரன், 29 பந்தில் அரைசதம் எட்டினார்.
திடீர் சரிவு
12வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர், 2வது பந்தில் பிரப்சிம்ரன் (57), 4வது பந்தில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரை (4) அவுட்டாக்கினார். கொனாலி (22) சற்று உதவினார். 11 ஓவரில் 100/1 ரன் என வலுவாக இருந்த பஞ்சாப் அணி, 17 ஓவரில் 147/7 என திணறியது. கடைசி நேரத்தில் ஓமர்சாய் (38) கைகொடுக்க, பஞ்சாப் அணி 20 ஓவரில் 200/8 ரன் எடுத்தது. விஷ்ணு வினோத் (15), பார்ட்லெட் (18) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை சார்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட் சாய்த்தார்.
ரிக்கிள்டன் விளாசல்
மும்பை அணிக்கு 'இம்பேக்ட்' வீரர் ரோகித் சர்மா, ரிக்கிள்டன் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 6.3 ஓவரில் 61 ரன் எடுத்த போது, ரிக்கிள்டன் (48) அவுட்டானார். ரோகித் சர்மா (25) சகால் சுழலில் சிக்கினார். நமன் திர் (9) கைவிட்டார். சகால் பந்தில் திலக் வர்மா அடித்த பந்து, 106 மீ., துாரம் சென்று, மைதானத்தின் மேற்கூரையில் விழுந்தது. ரூதர்போர்டு 20 ரன் எடுத்தார். 18 பந்தில் 50 ரன் தேவைப்பட்ட நிலையில் அடுத்த 7 பந்தில் 28 ரன் எடுக்கப்பட்டன.
மும்பை வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டன. பார்ட்லெட் வீசிய முதல் 2 பந்தில் வில் ஜாக்ஸ் 7 ரன் (6, 1) எடுத்தார். 4, 5வது பந்தில் திலக் வர்மா, 2 சிக்சர் அடிக்க, மும்பை அணி 19.5 ஓவரில் 205/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திலக் வர்மா (75), ஜாக்ஸ் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.
