தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/'இன்றோ, நாளையோ விசாரிப்போம்': அவமதிப்பு வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

'இன்றோ, நாளையோ விசாரிப்போம்': அவமதிப்பு வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

'இன்றோ, நாளையோ விசாரிப்போம்': அவமதிப்பு வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

38


UPDATED : நவ 26, 2026 07:02 AM

ADDED : நவ 26, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

38

UPDATED : நவ 26, 2026 07:02 AM ADDED : நவ 26, 2026 05:48 AM


38
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- சிறப்பு நிருபர் -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி, ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

கடந்த ஆண்டு நவம்பரில், இம்மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபம் ஏற்ற அனுமதி அளித்தார். இந்த உத்தரவை, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வும் உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான அனைத்து மனுக்களையும், நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம்.பஞ்சோலி அமர்வு விசாரித்து வருகிறது.

நவ., 20ம் தேதி இம்மனு விசாரணைக்கு வந்தபோது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இந்த ஆண்டு மட்டும் ஒருமுறை தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நவ., 21ல் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால், இம்மனு விசாரணைக்கு வரவில்லை.

அதனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா அல்லது தி.மு.க., அரசை பின்பற்றி, த.வெ.க., அரசும் தீபம் ஏற்றாமல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டது. எனினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல், தி.மு.க., அரசை போல, த.வெ.க., அரசும் நேற்று முன்தினம் தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. இது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனதை புண்படுத்தியது.

இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா மன்னிப்பு கோரி நேற்று நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும், அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் வாதிடுகையில், ''உச்ச நீதிமன்றம் கடந்த நவ., 20ல் பிறப்பித்த உத்தரவின்படி, தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், துரதிருஷ்டவசமாக அங்கு தீபம் ஏற்ற முடியவில்லை. இது தொடர்பாக கலெக்டர் தரப்பில் 16 பக்க நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை பதிவு செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.

''தீபம் ஏற்றிய மூன்று நாட்களுக்கு பிறகே, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஏன் மனு தாக்கல் செய்யப்பட்டது'' என நீதிபதி அரவிந்த் குமார் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, ''எதிர்மனுதாரர்கள், இப்பிரச்னையை எழுப்புவதற்கு முன்பாகவே, நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வருவது சரியாக இருக்கும் என்பதால், இம்முடிவு எடுக்கப்பட்டது,'' என வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் பதில் அளித்தார்.

இதற்கிடையே ஹிந்து தர்ம பரிஷத் மற்றும் பக்தர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதிடுகையில், ''உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது, தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்,'' என கோரினார்.

ஆனால், அந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். 'உரிய மனுவை தாக்கல் செய்தால், பரிசீலிக்கிறோம்' என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து பிற்பகல் அமர்வில், மீண்டும் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், நீதிமன்ற அவமதிப்பு மனு மட்டுமின்றி, தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி, தனியாக ஒரு இடைக்கால மனுவையும் தாக்கல் செய்தார்.

நீதிமன்ற அவமதிப்பு மனுவில், 'மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, கோவில் செயல் அலுவலர் செல்வி, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் வினய், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது. '1971ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நான்கு அதிகாரிகளுக்கும் மிக கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்' என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'நடந்த சம்பவங்கள் மிகவும் துரதிருஷ்டவசமானவை. இது சட்டத்தின் ஆட்சியை முழுதாக மீறும் செயல். வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்ட தீபம் இன்னும் எரிந்து கொண்டு தான் இருக்கிறது. சட்டத்தின் மாண்பை காக்கும் வகையில், அங்கிருந்து தீபத்தை எடுத்துச் சென்று தீபத்துாணில் ஏற்ற வேண்டும். கார்த்திகை தீப நாள் கடந்துவிட்டது என கூறி அதிகாரிகள் தப்பித்துவிடக் கூடாது' என அவர் சுட்டிகாட்டினார்.

ஸ்தானிகர்கள் மறுப்பு


இதே போல், கார்த்திகேயன் அழகர்சாமி என்பவரும் தீபத்துாணில் புதிதாக தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி இடைக்கால மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: உச்சிப் பிள்ளையார் கோவில் மண்டபத்தில் எரியும் அதே தீபத்தில் இருந்து, சுடரை எடுத்துச் சென்றோ அல்லது புதிதாக ஏற்பாடு செய்தோ தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும். வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றுவது எனக் கோவில் அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மாறாக, நான்கு ஸ்தானிகர்கள் தங்களிடம் எந்தக் கருத்தும் கேட்கப்படவில்லை என்றும், தாங்கள் எந்த ஆலோசனையும் வழங்கவில்லை என்றும் மறுத்துள்ளனர்.

உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ முந்தைய விசாரணைகளின் போது அறங்காவலர் குழு எந்தவொரு குறிப்பிட்ட நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. அப்படி இருக்கும்போது, உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் தவிர்க்கும் வெளிப்படையான முயற்சியாகக் கடைசி நிமிடத்தில் இத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வந்திருப்பது வியப்பளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'நீதிமன்ற பதிவகம், மனுக்களை சரிபார்த்த பின், இன்றோ அல்லது நாளையோ பட்டியலிட்டு விசாரிப்போம். அப்போது மதுரை கலெக்டரின் நிலை அறிக்கையும் பரிசீலிக்கப்படும்' என உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us