சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறியது முதல் ஜனநாயகன் வழக்கு வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள்(ஜனவரி 20)
சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியேறியது முதல் ஜனநாயகன் வழக்கு வரை: இன்றைய முக்கிய நிகழ்வுகள்(ஜனவரி 20)
UPDATED : ஜன 20, 2026 09:07 PM
ADDED : ஜன 20, 2026 08:00 AM

நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள், இன்று (ஜனவரி 20) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன? அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல்.
மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* புத்தாண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, முழு உரையை வாசிக்காத கவர்னர் ரவி, இந்தாண்டும் உரையை வாசிக்காமல் சட்டசபையில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
* பா.ஜ., தேசிய தலைவர் பதவிக்கு செயல் தலைவர் நிதின் நபின், 46, மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து, போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று அவர் முறைப்படி பொறுப்பேற்றார்.
* தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள், இன்றுகாலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
* தவெக தேர்தல் அறிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும், தேவைகளையும் அறிந்து தரவுகளைப் பெறுவது குறித்து விஜய் அமைத்த குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
* மத்திய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். மதுராந்தகத்தில் ஜனவரி 23ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேஜ கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக இன்றிரவு பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார்.
* விஜயின், ‛ஜனநாயகன்' படம் தொடர்பான தணிக்கை சான்று பிரச்னை வழக்கு இன்று சென்னை, ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். தணிக்கை சான்றிதழ் வழங்கக்கோரி, தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

