ஜல்லிக்கட்டு போட்டியிலும் டோக்கன் ஊழல்: இபிஎஸ் குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு போட்டியிலும் டோக்கன் ஊழல்: இபிஎஸ் குற்றச்சாட்டு
ADDED : செப் 04, 2025 07:54 PM

சோழவந்தான்: '' அலங்காநல்லூரில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டோக்கன் சிஸ்டம் கொண்டு வந்துவிட்டனர். திமுகவினருக்கு யார் வேண்டுமோ அவர்களுக்கு டோக்கன் கொடுத்து, பணத்தை வாங்கிக்கொண்டு அதிலும் ஊழல் செய்கின்றனர்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் வாடிப்பட்டியில் அவர் பேசியதாவது: விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே அதிகப்படியான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுத்தது அதிமுக அரசுதான். விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திலும் ஊழல் செய்கிறது திமுக அரசு. அதிமுக அரசு அமைத்த உடன் வேட்டி சேலை தரமாகவும் உரிய நேரத்திலும் வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.லேப்டாப் வழங்கும் திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும்.
விலை குறையும்
100 நாள் வேலைத்திட்ட தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் முதற்கட்டமாக ரூ.2999 கோடி பெற்றுக்கொடுத்தது. ஆட்சியில் இருப்பது திமுக, ஆனால் நிதி பெற்றுக்கொடுப்பது அதிமுக. மத்திய அரசு ஜிஎஸ்டியில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது, டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விலை குறைந்துள்ளது.
நம்பர் ஒன்
டாஸ்மாக் ஊழல் குறித்து அதிமுக ஆட்சியில் இவையெல்லாம் தோண்டியெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.ஸ்டாலின் திட்டத்தை அறிவிப்பார், பெயர் வைப்பார். பெயர் சூட்டுவதில் மட்டும் சிறந்த முதல்வர். இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவித்துள்ளார். பிரச்னையை தீர்க்கத்தான் முதல்வரை தேர்வு செய்வார்கள். ஆனால் இவர் இப்போதுதான் பிரச்னை இருப்பதையே கண்டுபிடித்திருக்கிறார். ஏதேதோ செய்வது போல சொல்வார்கள், ஆனால் நடக்காது, மக்களை ஏமாற்றுவதில் ஒண்ணாம் நம்பர் கட்சி திமுக.
டோக்கன் சிஸ்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பாரம்பரியமிக்க முறையில் மீண்டும் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டோக்கன் சிஸ்டம் கொண்டு வந்துவிட்டனர். உள்ளூரில் காளை வளர்த்தவர்களுக்கு எல்லாம் அதில் இடமில்லை. திமுக கட்சிக்காரர்களுக்கு யார் வேண்டுமோ அவர்களுக்கு டோக்கன் கொடுத்து, பணத்தை வாங்கிக்கொண்டு அதிலும் ஊழல் செய்கின்ற கட்சி திமுக. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.