எஸ்எஸ்ஐ வீட்டில் வைத்து கொலை: திருச்சியில் பயங்கரம்
எஸ்எஸ்ஐ வீட்டில் வைத்து கொலை: திருச்சியில் பயங்கரம்
ADDED : நவ 10, 2025 10:53 AM

திருச்சி: திருச்சியில் சிறப்பு எஸ்ஐ வீட்டுக்குள் புகுந்த கும்பல், அங்கு தஞ்சம் அடைந்திருந்த 26 வயது இளைஞரை வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பீம நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்,26. டூவீலர் மெக்கானிக் ஆன இவர், இன்று (நவ.,10) காலை வேலைக்கு செல்லும்போது, டூவீலரில் 5 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். பீம நகர் போலீஸ் குடியிருப்பு அருகே வந்தபோது, அவர்கள் தாமரைச்செல்வனை வழிமறித்துள்ளனர். பயத்தில் அங்கிருந்து போலீஸ் குடியிருப்புக்குள் நுழைந்த தாமரைச்செல்வன், எஸ்எஸ்ஐ செல்வராஜ் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
விடாமல் துரத்தி வந்த 5 பேரும், வீட்டினுள் சென்று தாமரைச்செல்வனை சரமாரியாக வெட்டி கொன்றனர். அதிர்ச்சியடைந்த எஸ்எஸ்ஐ செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் கூச்சலிடவே, கொலையாளிகள், அங்கிருந்து தப்பியோடினர். குடியிருப்பில் இருந்த மற்ற போலீஸ்காரர்கள், அவர்களின் குடும்பத்தார் சேர்ந்து ஒருவரை சுற்றி வளைத்து பிடித்தனர். மற்ற நான்கு பேர் தப்பினர்.
திருச்சி வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், சம்பவ இடத்திற்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் அருகே தான் தங்கியுள்ளார். அப்படியிருக்கையில் அவர் இருக்கும் பகுதி அருகே, அதுவும் எஸ்எஸ்ஐ வீட்டிற்குள்ளேயே கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

