UPDATED : டிச 21, 2025 08:13 AM
ADDED : டிச 21, 2025 03:40 AM

கடந்த பிப்ரவரியில் நடந்த டில்லி சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியை தோற்கடித்து, பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியின் பல மூத்த தலைவர்கள், முதல்வர் பதவிக்காக காத்திருந்த நிலையில், யாருக்குமே தெரியாத முகமான, ரேகா குப்தாவை முதல்வராக்கியது பா.ஜ.,
இவர் முதல்வராகி, 10 மாதங்கள் ஓடி விட்டன. ஒரு சாதாரண கவுன்சிலராக வாழ்க்கையை துவங்கிய ரேகா குப்தாவின் நடவடிக்கைகள், பா.ஜ.,வை பிரச்னையில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த தலைவர்கள் வருத்தப்படுகின்றனர். 'டில்லியில் காற்று மாசு படுமோசமாக உள்ளது. அதற்கு தீர்வு காண முதல்வர் சரியாக செயல்படவில்லை' என்கின்றனர்.
காற்று மாசு ஏ.க்யூ.ஐ., என்ற அளவில் கணக்கிடப்படுகிறது. 'ஏ.க்யூ.ஐ., என்பது டெம்பரேச்சர்; அதை எந்த ஒரு கருவியாலும் அளக்கலாம்' என, உளறி விட்டார் முதல்வர் ரேகா குப்தா. இது சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த டில்லி அமைச்சர்கள், எதுவும் பேசாமல் அமைதி காத்தனர்.
சமீபத்தில் இந்தியா வந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, டில்லி ஸ்டேடியத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்கள், முதல்வர் ரேகா குப்தா வந்ததும், 'ஏ.க்யூ.ஐ., ஏ.க்யூ.ஐ.,' என கோஷமிட்டு, அவரை பரிதாப நிலைக்கு தள்ளிவிட்டனர்.
இதன்பின், டில்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான நிலையை எட்டியதற்கு, சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தலைநகரின் நிலைக்கு பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியதுடன், 'இந்த விவகாரத்தை 10 மாதங்களில் தீர்க்க முடியாது; இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்' என, அறிவித்தார்.
இன்னொரு பக்கம் வேறொரு குற்றச்சாட்டும் பரவலாக பேசப்படுகிறது. அது, முதல்வர் ரேகா குப்தாவின் கணவர், அரசு விஷயங்களில் தலையிடுவதுடன், அரசு ஆலோசனைக் கூட்டங்களில் அவரும் பங்கேற்கிறாராம்.
ஒரு ஜோதிடர், சமீபத்தில் சில விஷயங்களை யு - டியூபில் சொல்லியிருந்தார். அதில் ஒன்று,- 'டில்லி முதல்வர் அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் முழுதும் முதல்வராக இருக்க மாட்டார்' என, பேசி இருந்தார். 'இது ஒருவேளை நடக்குமோ' என, டில்லி பா.ஜ.,வினர் ஆவலாக இருக்கின்றனர்.

