நவம்பர் 1 முதல் லாரி இறக்குமதிக்கு 25% வரி விதித்தார் அதிபர் டிரம்ப்: யாருக்கு பாதிப்பு?
நவம்பர் 1 முதல் லாரி இறக்குமதிக்கு 25% வரி விதித்தார் அதிபர் டிரம்ப்: யாருக்கு பாதிப்பு?
ADDED : அக் 07, 2025 07:30 AM

வாஷிங்டன்: நவம்பர் 1ம் தேதி முதல் லாரி இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த புதிய வரி விதிப்பால் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பு ஏற்ற முதல் நாளில் இருந்து வரி விதிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார். அண்மையில், அவர் சமையலறை மற்றும் கழிவறை உபகரணங்களுக்கு 50 சதவீத வரியும், பர்னிச்சருக்கு 30 சதவீத வரியும், கனரக லாரிகளுக்கு 25 சதவீத வரியும் விதித்தார். அதுமட்டுமின்றி, அவர் வரி விதிப்பது எனக்கு பிடிக்கும். இது அற்புதமான வார்த்தை. எங்களை பணக்காரர்களாக மாற்றி இருக்கிறது என டிரம்ப் வெளிப்படையாக பேசி இருந்தார்.
தற்போது, அந்த வகையில், லாரி இறக்குமதிக்கு வரி விதித்து டிரம்ப் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நவம்பர் 1ம் தேதி முதல் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து நடுத்தர மற்றும் கனரக லாரிகளுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார். இந்த புதிய வரி விதிப்பால் பாதிக்கும் நாடுகள் பட்டியலில் கனடா மற்றும் மெக்சிகோ உள்ளன.
பாதிப்பு யாருக்கு?
கடந்த 2024ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு 2,45,764 நடுத்தர மற்றும் கனரக லாரிகளை கனடா இறக்குமதி செய்துள்ளது. அமெரிக்காவின் ஒட்டுமொத்த வாகன சந்தையில் 5 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ அதிகமான லாரிகளை அமெரிக்காவில் விற்பனை செய்துள்ளது. இதனால் புதிய வரி விதிப்பு கனடா, மெக்சிகோவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
2023-24ம் நிதியாண்டில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் வாகன உதிரிபாக ஏற்றுமதி 6.79 பில்லியன் டாலராக இருந்தது என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. இந்த புதிய வரி விதிப்பால் இந்திய வாகன உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு தான் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.