உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுகிறோம்; மீண்டும் டிரம்ப் அதே பல்லவி!
உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுகிறோம்; மீண்டும் டிரம்ப் அதே பல்லவி!
ADDED : டிச 05, 2025 09:21 AM

வாஷிங்டன்: உலகம் முழுவதும் நாங்கள் அமைதியை நிலைநாட்டுகிறோம். இதுவரை யாரும் கண்டிராத அளவில் போர்களை நாங்கள் தீர்த்து வருகிறோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்து போர்களை நிறுத்தி அமைதியை நிலை நாட்டுவதாக பலமுறை கூறி வருகிறார். அவர் அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என வெளிப்படையாக கேட்டு இருந்தார். ஆனால் அவருக்கு நடப்பாண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லை. இருந்தாலும் அவர் போர்களை நிறுத்தியதாக கூறுவதை திரும்ப திரும்ப கூறி வருகிறார்.
இந்தசூழலில், வாஷிங்டனில் அமெரிக்காவின் உதவியுடன் காங்கோ மற்றும் ருவாண்டா நாடுகளுக்கு இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் காங்கோ மற்றும் ருவாண்டா அரசுகளை பாராட்டினார். அப்போது அதிபர் டிரம்ப் கூறியதாவது: இது ஆப்பிரிக்காவிற்கு ஒரு சிறந்த நாள், உலகிற்கு ஒரு சிறந்த நாள். இன்று நாம் வெற்றி பெறுகிறோம். உலகம் முழுவதும் நாங்கள் அமைதியை நிலைநாட்டுகிறோம். இதுவரை யாரும் கண்டிராத அளவில் போர்களை நாங்கள் தீர்த்து வருகிறோம்.
இதுவரை 8 போர்களை தீர்த்துவிட்டேன். மேலும் இன்னொரு போரை தீர்க்க முயற்சி நடக்கிறது. அது ரஷ்யா-உக்ரைன் போர். அந்த போர் முடிவுக்கு வந்தால், நாங்கள் இறுதியில் அங்கு செல்வோம். போரில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். அதை நிறுத்த வேண்டும். அதனை நிறுத்த நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம்.இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

