வெள்ளை மாளிகை பெண் அதிகாரியை வர்ணித்து சர்ச்சை; டிரம்ப் செயலால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு
வெள்ளை மாளிகை பெண் அதிகாரியை வர்ணித்து சர்ச்சை; டிரம்ப் செயலால் நெட்டிசன்கள் கொந்தளிப்பு
UPDATED : டிச 10, 2025 06:32 PM
ADDED : டிச 10, 2025 06:30 PM

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் வர்ணித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 28 வயதான, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் அழகை வர்ணித்து பேசியதாவது: இன்னைக்கு நம்ம சூப்பர் ஸ்டார் கரோலினைக் கூட கூட்டிட்டு வந்தோம். அவர் நல்லவங்க இல்லையா? கரோலின் நல்லவரா?
உங்களுக்கு தெரியும். அவர் தொலைக்காட்சியில் வரும் போது ஆதிக்கம் செலுத்துகிறார். அவளுக்கு எந்த பயமும் இல்லை. ஏனென்றால் எங்களிடம் சரியான கொள்கை உள்ளது. அவர் அந்த அழகான முகத்துடனும், ஒரு சிறிய இயந்திர துப்பாக்கியைப் போல நிற்காத உதடுகளுடனும் உள்ளார். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.
வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி குறித்து டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. டிரம்பின் கருத்துக்கள் அருவருப்பானவை என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதிபராக உயர் பதவியில் இருப்பவர் இத்தகைய கருத்துக்களை பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
முதல் முறை அல்ல
பெண்களின் தோற்றம் குறித்து பேசி அதிபர் டிரம்ப் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இத்தாலி பிரதமர் மெலோனியிடம் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே?
உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று டிரம்ப் கூறியது சர்ச்சையானது. அதேபோல், தற்போது அழகை வர்ணித்து உள்ள பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நேர்காணலின் போது பேசியது சர்ச்சையை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த கரோலின் லீவிட்?
* வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட். இவருக்கு வயது 28.
* 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் கரோலின் லீவிட் உதவி பத்திரிகை செயலாளராகப் பணியாற்றினார்.
* நியூ ஹாம்ப்ஷயரை பூர்வீகமாகக் கொண்ட கரோலின் லீவிட், நிக்கோலஸ் ரிச்சியோ என்பவரை மணந்தார் இந்த தம்பதிக்கு நிக்கோ என்ற மகன் உள்ளார்.
* டிரம்பின் பத்திரிகை செயலாளராகப் பணியாற்றிய ஐந்தாவது நபர் மற்றும் அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் நபர் தான் கரோலின் லீவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

