ADDED : செப் 08, 2025 01:05 AM

வாஷிங்டன்: சீனாவும், ரஷ்யாவும் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருவதாக கூறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அடுத்த மாதம் தென்கொரிய பயணத்தின்போது, சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையில், சமீபத்தில், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரை நம் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியது உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
'இருண்ட சீனாவிடம், ரஷ்யாவையும், இந்தியாவையும் அமெரிக்கா இழந்து விட்டது' என, டிரம்ப் கூறினார்.
அதேசமயம், 'நண்பர் மோடி சிறந்த பிர தமர். இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்தவே விரும்புகிறேன்' எனவும் டிரம்ப் கூறினார். இந்த சூழலில், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கை சந்திக்க டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய நாடான தென் கொரியாவின் ஜியாங்ஜு நகரில், ஏ.பி.இ.சி., எனப்படும் ஆசிய - பசிபிக் பொருளாதார ஓத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1ல் நடக்கவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இ தற்கு அவர் ஒப்புதல் தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டுக்கு சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும் வருகிறார்.
அவரை சந்தித்து பேச அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், மாநாட்டின் போது வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசவும் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சீனா வருமாறு டிரம்ப் மற்றும் அவரின் மனைவிக்கு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதற்கு டிரம்ப் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.