ஜப்பானுக்கு 15 சதவீத வரி; புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து
ஜப்பானுக்கு 15 சதவீத வரி; புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து
ADDED : செப் 05, 2025 07:30 AM

வாஷிங்டன்: அமெரிக்கா - ஜப்பான் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார். அந்த வகையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீதம் அடிப்படை வரி விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா - ஜப்பான் இடையிலான இந்த புதிய வரி தொடர்பான ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அதேவேளையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும், ஆட்டோ மொபைல், ஆட்டோ உதிரி பாகங்கள், விண்வெளி தயாரிப்புகள், மருந்துகள் மற்றும் உள்நாட்டில் கிடைக்காத இயற்கை வளங்களுக்கு துறைசார் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், 'இது அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவின் புதிய அத்தியாயம்,' என்றார்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து ஜப்பான் பொருட்களுக்கும், அமெரிக்கா 15 சதவீத அடிப்படை வரி விதிக்கப்படும். தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர் முதலீடுகளை செய்ய ஜப்பான் உறுதியளித்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒப்பந்தமாகும்,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.