பிபிசி நிறுவனம் மீது அதிபர் டிரம்ப் சட்ட நடவடிக்கை; நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
பிபிசி நிறுவனம் மீது அதிபர் டிரம்ப் சட்ட நடவடிக்கை; நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
ADDED : டிச 16, 2025 09:08 AM

வாஷிங்டன்: தான் பேசியதை திரித்து வெளியிட்டதாக கூறி, நஷ்ட ஈடு கேட்டு பிபிசி நிறுவனம் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
லண்டனை தலைமையிடமாக வைத்து பி.பி.சி., செய்தி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி தான் உரையாற்றியதை திரித்து தவறாக வெளியிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்த புகார், பி.பி.சி., செய்தி நிறுவனத்தின் இயக்குநர் டிம் டேவி, செய்திப் பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்ய வழி வகுத்தது.
எனினும் மனம் ஆறாத அதிபர் டிரம்ப் 10 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.90,874 கோடி) நஷ்ட ஈடு கேட்டு பிபிசி நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளார். செய்தி நிறுவனத்தின் மீது அதிபர் டிரம்ப் சட்ட நடவடிக்கை எடுப்பது முதல்முறை அல்ல. அவர் கடந்த காலத்தில் நஷ்டு ஈடு கேட்டு வழக்கு வழக்கு தொடர்ந்த விபரம் பின்வருமாறு;
செப்டம்பரில், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை ஜனநாயகக் கட்சியின் ஊதுகுழலாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, அதன் மீது 15 பில்லியன் டாலர் கேட்டு அதிபர் டிரம்ப் வழக்குத் தொடர்ந்தார். ஜூலை மாதம், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியீட்டாளர் மீது டிரம்ப் 10 பில்லியன் டாலர் கேட்டு டிரம்ப் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

