சென்னையை விட பெரிதாகிறது துாத்துக்குடி துறைமுகம்: ரூ.1 லட்சம் கோடியை அள்ளித்தரும் தனியார் நிறுவனங்கள்
சென்னையை விட பெரிதாகிறது துாத்துக்குடி துறைமுகம்: ரூ.1 லட்சம் கோடியை அள்ளித்தரும் தனியார் நிறுவனங்கள்
UPDATED : நவ 01, 2025 05:47 AM
ADDED : நவ 01, 2025 01:00 AM

சென்னை: இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் 2வது பெரிய துறைமுகமாகவும் துாத்துக்குடி விளங்குகிறது. பெட்ரோலியம், எல்.பி.ஜி., எரிவாயு, நிலக்கரி மற்றும் சரக்கு பெட்டகங்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. சர்க்கரை, உப்பு, சிமென்ட் மற்றும் பிற சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கும், இத்துறைமுகம் அதிகம் பயன்படுகிறது.
இந்த துறைமுகத்தில் தொடர்ந்து விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, மும்பையில் நடந்த கடல்சார் மாநாட்டில், துாத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் எரிவாயு ஆலை அமைப்பது உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த, தனியார் நிறுவனங்களுடன், 1 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
துாத்துக்குடி துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:
கடல்சார் துறையில், எங்களின் பங்களிப்பு முக்கியமானது. மும்பையில் நடந்த கடல்சார் மாநாட்டில், நாட்டின் உள்ள துறைமுகங்களை மேம்படுத்தும் வகையில், 100க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில், துாத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு தனியார் நிறுவனங்களுடன், 1 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்களை செயப்படுத்தும் வகையில், 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
குறிப்பாக, துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில், 25,400 கோடி ரூபாயில், பசுமை ஹைட்ரஜன் எரிவாயு ஆலை அமைக்க, 'செம்ப் கார்ப்' நிறுவனத்துடனும், 8,800 கோடி ரூபாயில், புதிய கப்பல் கட்டுமான தளம் அமைக்க, 'ஜின் அண்ட் லீ' நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இது தவிர, கப்பல் பராமரிப்பு நிலையம் அமைப்பது, பசுமை இழுவை கப்பல்கள் வாங்குவது, கப்பல் தளத்தில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு பதிலாக மின்சார ஜெனரேட்டர்கள் பயன்படுத்துவது போன்ற பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, 'டெண்டர்' வெளியிட்ட பின் பணிகள் துவங்கப்படும்.
சென்னை துறைமுகம் தற்போது ஆண்டுக்கு, 136 மில்லியன் சரக்குகளை கையாளும் திறன் உடையதாக இருக்கிறது. அங்கு அடுத்தகட்ட விரிவாக்கம் செய்ய இடப்பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். கச்சா எண்ணெய், நிலக்கரியை கையாள முடியாது.
ஆனால், துாத்துக்குடி துறைமுகத்தில் இந்த பிரச்னை இல்லை. தற்போது, ஆண்டுக்கு 81.5 மல்லியன் டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. அடுத்த கட்டமாக, கூடுதல் முனையங்களுடன் வெளிப்புற துறைமுகமும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான, திட்ட ஆய்வு முடிந்த பின், அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம். பணிகள் முடியும் போது, 2030ல் சரக்குகள் கையாளும் திறன், 160 மில் லியன் டன்னாக உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

