தவெகவினர் சின்னப்பிள்ளைகள்... பக்குவப்பட வேண்டும்; சொல்கிறார் சீமான்
தவெகவினர் சின்னப்பிள்ளைகள்... பக்குவப்பட வேண்டும்; சொல்கிறார் சீமான்
ADDED : செப் 24, 2025 12:40 PM

சென்னை: தவெகவினர் சின்னப்பிள்ளைகள், அவர்கள் பக்குவப்பட வேண்டும், பொதுவெளியில் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி;
தவெகவினர் எங்களை விமர்சிப்பதை ரசித்து சிரித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சின்னப்பிள்ளைங்கதானே? பக்குவப்பட வேண்டும். கருத்தை கருத்தாக மோத தெரியவில்லை.
பாஜ எனது கொள்கை எதிரி. திமுக எனது அரசியல் எதிரி என்று நீங்கள் (நடிகர் விஜய்)சொல்கிறீர்கள். கொள்கைக்கும், அரசியலுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று கேட்டால் நீங்கள் சொல்லணும். வாத்தியார் ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்லணும். பொது தளத்தில் ஒன்று சொல்லும் போதும், ஒரு கேள்வி கேட்கும் போது இப்படி மாற்றுக் கருத்துகள் எழும்.
காங்கிரஸ், பாஜ ஒரே கொள்கைகளை கொண்டவை. அவர்களின் கட்சி கொடிகளில் வண்ணம் மாறும், ஆனால் அவர்களின் எண்ணம் மாறாது. அதே தான் திமுகவுக்கும், அதிமுகவுக்கும். பாஜ உங்களின் கொள்கை எதிரி என்று கூறும்போது, காங்கிரஸ் உங்களின் நண்பனா? என்று தானாக வந்துவிடும். அப்போது காங்கிரஸ் உங்களின் கொள்கை நண்பனா? விளக்க வேண்டும்.
இட்லி எனக்கு பிடிக்காது, தோசை பிடிக்கும் என்றால் மாவு ஒன்றுதானே ராஜா. தோசைக்கு என்று தனி மாவு இல்லை ராஜா, அதே அரிசி, அதே உளுந்துதானே ராஜா. கொள்கைக்கும், அரசியலுக்கும் வேறுபாடு சொல்லுங்க.
இவ்வாறு சீமான் பேட்டி அளித்தார்.