அமைச்சருடன் த.வெ.க., செயலாளர் ரகசிய 'டீலிங்'; மதுரையில் தொண்டர்கள் போராட்டம்
அமைச்சருடன் த.வெ.க., செயலாளர் ரகசிய 'டீலிங்'; மதுரையில் தொண்டர்கள் போராட்டம்
UPDATED : டிச 25, 2025 07:11 AM
ADDED : டிச 25, 2025 06:58 AM

மதுரை: மதுரையில் அமைச்சர் மூர்த்தியுடன் ரகசிய 'டீலிங்' வைத்துக்கொண்டு த.வெ.க., வடக்கு மாவட்ட செயலாளர் கல்லாணை எந்த போராட்டத்திலும் ஈடுபடாமல் அமைதி காத்துவருவதாகவும், பதவி வழங்க பணம் கேட்பதாகவும் கூறி அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
த.வெ.க.,வில் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று கூடுதலாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். துாத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக கடந்தாண்டு நியமிக்கப்பட்டிருந்த அஜிதா அக்னஸ், மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத நிலையில் நேற்றுமுன்தினம் கட்சி தலைமையகத்தில் காரில் வந்த விஜயை முற்றுகையிட்டார். பின்னர் தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் மதுரையிலும் நேற்று வடக்கு மாவட்ட செயலாளர் கல்லாணைக்கு எதிராக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது: மாவட்ட அளவில் பதவிகளை வழங்க கல்லாணை மறைமுகமாக பணம் கேட்கிறார். பெண் தொண்டர்களை 'பாடி ஷேமிங்' செய்யும் வகையில் கேலி செய்து வருகிறார். அமைச்சர் மூர்த்தியிடம் பணம் பெற்றுக்கொண்டு மக்களுக்கான பிரச்னை தொடர்பாக எந்த போராட்டத்தையும் நடத்துவதில்லை. விஜய் ரசிகராக இருந்து பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கவில்லை. இவ்வாறு கூறினர்.
கல்லாணை தரப்பில் கேட்டபோது, 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். கட்சிக்காக உண்மையாக உழைப்பது விஜய்க்கும், பொதுச்செயலாளர் ஆனந்த்திற்கும் தெரியும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கனவே தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

