தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள்!
தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு மரணங்கள்!
UPDATED : அக் 23, 2025 01:22 PM
ADDED : அக் 23, 2025 12:58 PM

சென்னை: மறைந்த நடிகை மனோரமாவின் மகன் பூபதி மற்றும் இசையமைப்பாளர் தேவா தம்பி சபேஷ் ஆகியோர் இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.
தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத எவர்கிரீன் நடிகை மனோரமா. பெண் நடிகைகளில் 1000 படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்தவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம், மனோரமா மறைந்தார். இவரது ஒரே மகன் பூபதி(70), உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
மூச்சு திணறல் பிரச்னையால் அவதிப்பட்ட வந்தார். கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தனது அம்மா மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று காலை இவரது உயிர் பிரிந்தது.
நடிகர் விசுவின் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்தில் அறிமுகமான பூபதி, அதன் பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். மகனுக்காக தூரத்து பச்சை என்ற படத்தையும் மனோரமா தயாரித்தார். ஆனால் எது எடுபடவில்லை. சீரியல்கள் சிலவற்றிலும் பூபதி நடித்தார்.
இவரை திரையுலகில் அறிமுகப்படுத்தி பிரபலமாக்க மனோரமா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. பூபதிக்கு ராஜராஜன் என மகனும், அபிராமி, மீனாட்சி என்ற மகள்களும் உள்ளனர். நாளை (அக் 24) இறுதி சடங்கு நடக்கிறது.
தேவா தம்பி காலமானார்
அதேபோல், இசையமைப்பாளர் தேவா தம்பி சபேஷ், 68, சென்னையில் காலமானார்.இசையமைப்பாளர் தேவா பாடல்கள் எந்தளவிற்கு ஹிட்டானதோ, அதன் பின்னணியில் அவரது சகோதரர்களான சபேஷ் - முரளியின் பங்களிப்பும் இருக்கும்.
இதனால் தேவாவின் படங்களில் இசை உதவி என்பதில் சில படங்களில் இவர்களது பெயர்களும் இடம்பெற்றிருக்கும். சபேஷ் - முரளி சகோதரர்கள் சேர்ந்து சில படங்களுக்கு இசையமைப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக 'மிளகா, இம்சை அரசன் 23ம் புலிகேசி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், பொக்கிஷம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து' படங்களில் பணியாற்றியுள்ளனர்.
தற்போது திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார் சபேஷ் (எம்.சி. சபேசன்). இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12:15 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 68. சபேஷின் மறைவுக்கு திரைப்பட இசைக்கலைஞர் சங்கத்தினர் மற்றும் திரைப்பட நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.