இந்தியாவின் போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க தயார்; உக்ரைன் அறிவிப்பு
இந்தியாவின் போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க தயார்; உக்ரைன் அறிவிப்பு
ADDED : அக் 03, 2026 09:53 PM

கீவ்: இந்தியாவின் போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலக்க தயாராக உள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறி உள்ளார்.
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் நீடித்து வருகிறது. இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுகளை கண்டறிவதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அவரிடம் இதற்கான மிக சிறந்த யோசனைகள் உள்ளன, அவருக்கு நன்றி என்று ரஷ்ய அதிபர் புடின் அண்மையில் கருத்து கூறி இருந்தார்.
புடின் கருத்து ஒருபக்கம் இப்படி இருக்க, மறுபக்கம் உக்ரைன் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளில் முனைப்புடன் செயலாற்றி வருகிறார். இந் நிலையில், இந்தியாவின் போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க தயாராக உள்ளதாக உக்ரைன் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறி இருப்பதாவது;
எங்களிடம் 4 போர் நிறுத்த முன்மொழிவுகள் இருக்கின்றன. சாத்தியமான போர் நிறுத்த முன்மொழிவுகள் இந்தியா, துருக்கி, எகிப்து மற்றும் அமெரிக்காவிடம் இருந்து வந்துள்ளன.
அவற்றில் மிகவும் விரிவானது மற்றும் அதிக விஷயங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த முன்மொழிவு என்றால் இந்தியாவின் முன்மொழிவு தான். எரிசக்தி, கருங்கடல் போர் நிறுத்தத்திற்கு தயாராக இருக்கிறோம். போர் நிறுத்தத்தின் பல்வேறு வடிவங்களை கருத்தில் கொள்ள தயாராக உள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறி உள்ளார்.
