ADDED : செப் 23, 2025 08:14 PM

லண்டன்: கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இங்கிலாந்தைச் சேர்ந்த அம்பயர் ஹரோல்ட் டிக்கி பேர்ட் வயது முதிர்வால் காலமானார். அவருக்கு வயது 92.
இங்கிலாந்தின் யார்க்ஷைரின் பர்ன்ஸ்லே பகுதியில் 1933ம் ஆண்டு ஏப்., 19ல் பிறந்தார். கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 1956 முதல் 1965 வரை யார்க்ஷையர் மற்றும் லெய்செஸ்டர்ஷையர் அணிக்காக 93 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இரண்டு சதம் அடித்துள்ளார்.
32 வயதில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் பிறகு, 1970 முதல் இங்கிலாந்தின் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்ற துவங்கினார்.
3 ஆண்டுகள் கழித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அம்பயராக அறிமுகமானார். அது முதல் 66 டெஸ்ட் போட்டிகளுக்கும் 69 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கும் அம்பயராக பணியாற்றி உள்ளார். அதில் 3 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்கள் அடக்கம். அதிக தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலும் டிக்கி பேர்டின் துல்லியமான முடிவுகள் மற்றும் அவரது ஸ்டைலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதனால், வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.
கடைசியாக 1996ல் இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியுடன் அம்பயர் பணிக்கு விடை கொடுத்தார். அப்போது இரு அணி வீரர்களும் கொடுத்த பிரியாவிடை மறக்க முடியாததாக அமைந்தது. கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய பணிக்காக பல விருதுகளை பெற்றுள்ளார் யார்க்க்ஷையர் கவுன்டி கிரிக்கெட் கிளப் தலைவராக 2014ல் பணியாற்றி உள்ளார்.
தனது 92 வயதில், வயது முதிர்வு காரணமாக டிக்கி பேர்ட் வீட்டிலேயே காலமானார். அவருக்கு ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.