திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி ஈ.வெ.ரா., சிலை முன் தீக்குளித்து தற்கொலை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி ஈ.வெ.ரா., சிலை முன் தீக்குளித்து தற்கொலை
UPDATED : டிச 19, 2025 02:30 AM
ADDED : டிச 19, 2025 02:26 AM

மதுரை: தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவர், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும், மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை, நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் பூர்ணசந்திரன், 40. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
பகுதி நேரமாக பழ விற்பனை செய்து வந்த பூர்ணசந்திரன், நேற்று மாலை 4:00 மணிக்கு, தன் சரக்கு வாகனத்துடன் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள போலீஸ் அவுட்போஸ்ட் சந்திப்பில் இருக்கும் ஈ.வெ.ரா., சிலை அருகே, ஆளில்லா போலீஸ் பூத்திற்கு சென்று, உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்; பின், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்களும், அவ்வழியே வந்த துணை மேயர் நாகராஜனும், போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் பூர்ணசந்திரன் இறந்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்கொலைக்கு முன் பூர்ணசந்திரன், வாட்ஸாப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
திருப்பரங்குன்றம் முருகனின் முதல் படை வீடு. அதில் தீபம் ஏற்றுவதால் மதுரைக்கு தான் பெருமையே தவிர, யாருக்கும் பாதகமில்லை.
அங்கே தர்கா இருக்கு. அது அமைதியான இடம். அங்கிருந்து 15 மீட்டர் தள்ளி தீபத்துாண் உள்ளது. அதில் தீபம் ஏற்ற வேண்டும் என கோர்ட் சொல்லிய பின்னரும், தீபம் ஏற்ற விடாமல் தடுக்கின்றனர். மதுரைக்கு பெருமை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே தடுக்கின்றனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது, அதை கோடிக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிக்கலாம். அத்தனை பேருக்கும் முருகன் அருள் கிடைக்கும்.
இதனால், தர்காவுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அப்படி இருக்கும்போது, ஓட்டு அரசியலுக்காக தீபம் ஏற்றுவதை அரசு தடுக்கிறது.
எங்கள் வீட்டில் எல்லாரும் தி.மு.க., தான். ஒரு ஹிந்துவாக இருந்து, தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை.
திருப்பரங்குன்றத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, சி.ஆர்.பி.எப்., வீரர்கள் துணையுடன் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டும், மாநில அரசு தடுத்தது சரியல்ல.
கடந்த 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவது தடைபட்டு, மோட்சம் ஏற்றும் இடத்தில் தான், தீபம் ஏற்றி வருகின்றனர். இது தவறான விஷயம்.
இந்த விஷயத்தில், அறநிலையத்துறை தான் வழக்கு போட்டிருக்க வேண்டும். இது மாதிரி ஒரு பிரச்னை தர்காவுக்கு இருந்திருந்தால், அதை எதிர்த்து வக்பு வாரியம் வழக்கு போட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஹிந்துகள், மத விஷயத்தில் ஒன்று சேருவதில்லை. அதனால் தான், அரசு இப்படி செயல்படுகிறது.
பெரியார் சிலை முன், ஏன் தீக்குளிக்கிறேன் என்றால், கடவுள் இல்லை என்று சொன்னவர் முன், கடவுளுக்காக இதை செய்கிறேன் என்பதை காட்டத்தான். 2026 தேர்தலுக்கு பிறகாவது, தீப விஷயத்தில் நல்லது நடக்க வேண்டும். என் குடும்பத்திற்கு என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்மிக பூமியான மதுரையில் ஒரு ஆன்மிக நிகழ்ச்சி நடத்த முடியவில்லையே என்ற மன உளைச்சலை அடுத்தே, உயிரை மாய்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த பதிவில் உள்ளது.

