தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சு தோல்வி: இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டு

 அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சு தோல்வி: இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டு

 அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சு தோல்வி: இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டு


ADDED : ஏப் 13, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 01:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இஸ்லாமாபாத்: அமெரிக்கா - ஈரான் இடையே நீடித்த அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், பாகிஸ்தானில் நேற்று முன்தினம், 21 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தை, எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படாமலேயே முடிவுக்கு வந்தது.

மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து பிப்., 28ம் தேதி போரை துவக்கின. பல நாடுகளின் வலியுறுத்தல்களுக்கு பின், இரண்டு வார போர் நிறுத்தத்துக்கு அமெரிக்காவும், ஈரானும் ஒப்புக் கொண்டன.

ஈரான் மறுப்பு


போர் நிறுத்த ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இரு தரப்பும், நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பேசுவதற்கு முன்வந்தன. அதன்படி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் நேற்று முன்தினம் பேச்சு துவங்கியது.

அமெரிக்கா தரப்பில் அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேச்சுக்கு தலைமை தாங்கினார். ஈரான் தரப்பில் அந்நாட்டு பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழு பங்கேற்றது. நேற்று காலை வரை 21 மணி நேரம் நீடித்த பேச்சு, எந்தவொரு உடன் பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தது.

அமெரிக்க தரப்பில், 'எதிர்காலத்தில் அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை ஈரான் வழங்க வேண்டும். அணு ஆயுதத்தை விரைவாக உருவாக்க உதவும் கருவிகள் அல்லது தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தக் கூடாது' என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டது; இதை ஏற்க ஈரான் மறுத்தது.

புறப்பட்டனர்



அதேபோல, அணுசக்திக்காக யுரேனியத்தை செறிவூட்டுவது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஈரான் கேட்டது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சு தோல்வியில் முடிந்தது. இரு தரப்பும், பாகிஸ்தானில் இருந்து நேற்றே புறப்பட்டன.

அமைதி பேச்சு குறித்து ஈரான் வெளியுறவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அமெரிக்கா அதிகப்படியான கோரிக்கைகளை முன்வைத்ததால், உடன்பாட்டை எட்ட முடியவில்லை. ஒரே சந்திப்பில் உடன்பாடு எட்டப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை' என்றார்.

இதையடுத்து, அடுத்த சுற்று பேச்சுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. அதற்கு இரு நாடுகளும் இதுவரை சம்மதம் தெரிவிக்கவில்லை.

நியாயமற்ற கோரிக்கைகள் அமைதி பேச்சு குறித்து ஈரான் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 'அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகள் பேச்சின் முன்னேற்றத்தை தடுத்தன. இதனால், பேச்சு உடன்பாடு ஏதுமின்றி முடிவுக்கு வந்தது' என, தெரிவிக்கப்பட்டது.



10 முறை டிரம்புடன் பேசிய வான்ஸ் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: அமைதி பேச்சு நடந்த சந்தர்ப்பத்தில், 10க்கும் மேற்பட்ட முறை அதிபர் டிரம்பை தொலைபேசியில் அழைத்து பேசினேன். ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதை தடுக்கும் அடிப்படை உறுதிமொழியை பெறுவதே டிரம்பின் முக்கிய இலக்காக இருந்தது. இந்த பேச்சு தோல்வியடைந்தது ஈரானுக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.



அமெரிக்காவே காரணம்! ஈரான் பார்லிமென்டின் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில், 21 மணி நேரமாக நடந்த அமைதி பேச்சின் போது, போர் நிறுத்தம் தொடர்பான எதிர்பார்ப்புகளை ஈரானிய குழு தெரிவித்தது. ஆனால், எங்களின் கருத்துக்கள் மீது அமெரிக்கா நம்பிக்கை கொள்ளவில்லை. எங்கள் மீது நம்பிக்கை வைக்க முடியுமா, இல்லையா என்பதை அமெரிக்கா தீர்மானிக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் கூறினார்.



'உயிர் பிழைக்க போராடுகின்றனர்' மேற்காசிய நாடான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, அணு ஆயுதம் தயாரிக்கும் வசதிகளை, பூமிக்கு அடியில் ஆழமாக மறைத்தார். சக்திவாய்ந்த, 'பி-2' ரக விமானங்கள் கூட அதை அடைய முடியாதபடி செய்தார். ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் வாயிலாக, அந்நாட்டினரின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை நசுக்குவதில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. ஈரான் நம் கழுத்தை நெரித்து சுற்றி வளைக்க முயன்றது. ஆனால், நாம் தான் அவர்களின் கழுத்தை நெரித்துள்ளோம். அவர்கள் நம்மை முற்றிலுமாக அழித்துவிடுவதாக அச்சுறுத்தினர். இப்போது அவர்களே உயிர் பிழைக்க போராடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



அமைதி பேச்சு முயற்சி தொடரும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் கூறியதாவது: வரும் நாட்களில் ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான அமைதி பேச்சுக்கு வழிவகுப்பதில் பாகிஸ்தான் தன் பங்கை தொடர்ந்து ஆற்றும். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக் கொண்டதற்கும், பாகிஸ்தானின் மத்தியஸ்த பங்கை அங்கீகரித்ததற்கும் இரு தரப்பினருக்கும் நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.



பாக்., முன்னிலையில் நடந்த மறைமுக - நேரடி பேச்சு ஈரான் - அமெரிக்கா இடையே நேற்று முன்தினம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் அமைதி பேச்சு நடந்தது. இதன் ஒவ்வொரு கட்டத்திலும் பாகிஸ்தான் பங்கு வகித்துள்ளது. இரு தரப்பினரையும், அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனித்தனியாக சந்தித்து பேசினார். இரண்டரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்தது. அடுத்த கட்டமாக, ஒரு மணி நேர இடைவேளைக்கு பின், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நேரடி பேச்சு நடந்தது. பாக்., முன்னிலையில் நடந்த இந்த பேச்சில், கோரிக்கைகள் நிபுணர்கள் மட்டத்தில் விவாதிக்கப்பட்டன. தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த செய்திகளின் பரிமாற்றம் நள்ளிரவு வரை தொடர்ந்தது.



போர் நிறுத்தம் நீடிக்கும் மீண்டும் போர் தொடருமா என்ற அச்சம் ஏற்பட்டது. இருப்பினும், ஏற்கனவே அறிவித்தபடி, இரண்டு வார தற்காலிக போர் நிறுத்தம், வரும் 21ம் தேதி வரை தொடரும் என, பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us