ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த அமெரிக்கா - இஸ்ரேல் திட்டம்
ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த அமெரிக்கா - இஸ்ரேல் திட்டம்
ADDED : மே 01, 2026 10:39 PM

வாஷிங்டன்: ஈரான் மீது புதிய தாக்குதலை நடத்த அமெரிக்காவும், இஸ்ரேலும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வருகின்றன. 60 நாட்களை கடந்துள்ள இப்போர், அமைதி பேச்சுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பான புதிய திட்டங்கள் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, 'சென்ட்காம்' எனப்படும் அந்நாட்டின் ராணுவ மத்திய கட்டளையகம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டம், 45 நிமிடங்கள் வரை நீடித்தது.
மறுபுறம், கடந்த 24 மணி நேரத்தில், 6,500 டன் வெடி பொருட்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இரண்டு சரக்கு கப்பல்கள் மற்றும் பல விமானங்களில் இந்த பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில், வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் வெடி பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும். சென்ட்காம் தயாரித்துள்ள புதிய திட்டத்தில், மூன்று முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
ஈரானின் உட்கட்டமைப்புகளை இலக்காக வைத்து சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்துவது, ஹார்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து சர்வதேச கப்பல் போக்குவரத்தை திறப்பது, ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சிறப்பு படைகளை பயன்படுத்தி கையகப்படுத்துவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இதற்கிடையே, அமைதி பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் எச்சரித்துள்ளார். அமெரிக்கா மீதான நம்பிக்கை முற்றிலும் அழிந்து விட்டதாகவும், ஏற்கனவே பேச்சு நடந்த போது, அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது இரண்டு முறை தாக்குதல் நடத்தியதாகவும் பெலாரஸ் அதிபரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில், ஈரானுக்கு இறுதி அடி கொடுக்க அமெரிக்கா தயாராகி வருவதையே ராணுவ நகர்வுகள் காட்டுகின்றன. இது போர் மீண்டும் தீவிரமடைவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பயன்படுத்த அமெரிக்கா திட்டம்
ஈரானுக்கு எதிரான போரில், அந்நாட்டின் உட்பகுதிகளில் இருக்கும் இலக்குகளை தாக்க நீண்ட துாரம் செல்லக்கூடிய ஆயுதம் அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது. இதனால், தன் அதிநவீன, 'டார்க் ஈகிள் ஹைப்பர்சோனிக்' ஏவுகணைகளை பயன்படுத்த அந்நாடு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை ஒவ்வொன்றின் விலையும், 125 கோடி ரூபாய். இது, ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லக்கூடியது. இதனால், எதிரி நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் இதை இடைமறிப்பது கடினம். மேலும், இந்த ஏவுகணை, 2,775 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இதை பயன்படுத்த அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்தால், அமெரிக்கா தன் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு நேரடி போரில் ஹைப்பர்சோனிக் ஆயுதத்தை பயன்படுத்துவதாக இது அமையும்.
