ஜனவரி முதல் இதுவரையில் 85 ஆயிரம் விசாக்கள் ரத்து; அமெரிக்கா அறிவிப்பு
ஜனவரி முதல் இதுவரையில் 85 ஆயிரம் விசாக்கள் ரத்து; அமெரிக்கா அறிவிப்பு
ADDED : டிச 10, 2025 07:06 AM

வாஷிங்டன்: இந்தாண்டின் தொடக்கத்தின் முதல் இதுவரையில் 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, வெளிநாட்டு மக்கள் கொள்கையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஹெச் 1பி விசாவுக்கு புது கட்டுப்பாடுகள், சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்துள்ளது. கடுமையான குடிவரவு கொள்கை மற்றும் எல்லை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ' அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும்,' என்று டிரம்ப் படத்தோடு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் இந்த உத்தரவை எப்போதும் நிறுத்தப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட 85 ஆயிரம் விசாக்களில் 8 ஆயிரம் விசாக்கள் மாணவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

