காசா ஆதரவு போராட்டத்தில் டிரம்புக்கு எதிராக பேச்சு: கொலம்பியா அதிபர் விசாவை பறித்தது அமெரிக்கா
காசா ஆதரவு போராட்டத்தில் டிரம்புக்கு எதிராக பேச்சு: கொலம்பியா அதிபர் விசாவை பறித்தது அமெரிக்கா
ADDED : செப் 27, 2025 02:11 PM

நியூயார்க்: காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ பேசுகையில், ''டிரம்பின் கட்டளைகளை மீறுங்கள். மனிதகுலத்தின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்.
பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் உலகளாவிய ஆயுதப் படை உருவாக வேண்டும். இந்தப் படை அமெரிக்காவை விட பெரியதாக இருக்க வேண்டும்'' என தெரிவித்தார். முன்னதாக, ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசுகையில், ''காசாவில் இஸ்ரேலின் போரை கடுமையாக குஸ்டாவோ பெட்ரோ எதிர்த்தார்.
அவர் '' காசாவில் இனப்படுகொலைக்கு அமெரிக்கா உடந்தையாக இருக்கிறது. கரீபியன் கடலில் போதைப்பொருள் படகுகள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது தொடர்பாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்றார். இவர் டிரம்பிற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால் கொலம்பியா அதிபர் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோவின் பொறுப்பற்ற கருத்துக்களால் அவரது விசாவை நாங்கள் ரத்து செய்துள்ளோம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.