பிரதமர் மோடி உலக அரசியலில் அதிக செல்வாக்குமிக்க தலைவர்; பிரபல அமெரிக்க பாடகி புகழாரம்
பிரதமர் மோடி உலக அரசியலில் அதிக செல்வாக்குமிக்க தலைவர்; பிரபல அமெரிக்க பாடகி புகழாரம்
ADDED : டிச 06, 2025 12:05 PM

வாஷிங்டன்: உலக அரசியலில் பிரதமர் மோடி மிகவும் முக்கியமான மற்றும் அதிக செல்வாக்கு மிக்க தலைவர் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி மேரி மில்பென் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடினின் சந்திப்பு இருநாடுகளுக்கு இடையேயான ஆழமான உறவை காட்டுகிறது. இருவரின் பார்வையில் இது ஒரு சிறப்பான சந்திப்பாகும். இதன்மூலம், உலகளவில் இந்தியாவின் பங்களிப்பு விரிவடைகிறது.
அமெரிக்கா இந்தியாவுடன் வைத்துள்ள ஆழமான உறவைப் போன்று, ரஷ்யா - இந்தியாவின் உறவும் இருக்கின்றன. புடினுடனான சந்திப்பின் போது, எரிசக்தி, பாதுகாப்பு துறைகளில் தனித்துவமான ராஜதந்திர நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டார். அதேபோல, எண்ணெய் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பில் புடினும் கவனம் செலுத்தினார்.
பிரதமர் மோடியின் அணுகுமுறை தேசிய நலன்களை பிரதிபலித்தது. இறுதியில், பிரதமர் மோடி இந்தியாவுக்கு சிறந்ததைச் செய்தார். ஒவ்வொரு தலைவரும் தங்கள் நாட்டிற்கு ராஜதந்திர ரீதியாக சிறந்தது என்ன என்பதைப் பார்ப்பார்கள். பிரதமர் மோடி புவி அரசியலின் மையப்புள்ளியில் இருக்கிறார். உலக அரசியலில் பிரதமர் மோடி மிகவும் முக்கியமான மற்றும் அதிக செல்வாக்குமிக்க தலைவராக திகழ்கிறார். அதை யாராலும் மறுக்க முடியாது.
இந்தியா நமது நண்பன், நமது மிக நீண்ட மற்றும் வலுவான ஜனநாயக கூட்டாளி. இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினரின் சமீபத்திய போக்கு மிகவும் கொடுமையானது. பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்க வேண்டும். பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்டு, இருநாடுகளுக்கு இடையேயான உறவை மீண்டும் சரிசெய்ய வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

