அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
அரட்டை செயலியை பயன்படுத்துங்க: சுப்ரீம் கோர்ட் அறிவுரை
UPDATED : அக் 15, 2025 11:42 AM
ADDED : அக் 15, 2025 11:14 AM

புதுடில்லி: வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில், ''வாட்ஸ் அப் பயன்பாடு அடிப்படை உரிமை அல்ல, உள்நாட்டு தயாரிப்பான ஸோகோவின் அரட்டை செயலியை பயன்படுத்துங்கள்'' என கூறி மனுவை சுப்ரீம்கோர்ட் தள்ளுபடி செய்தது.
தனது வாட்ஸ்அப் அக்கவுண்ட் தடை செய்யப்பட்டது குறித்து, டாக்டர் ராமன் குந்த்ரா என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தனிப்பட்ட தகவல் தொடர்புக்கு வாட்ஸ் அப் அவசியம் என தனது வாதங்களை முன்வைத்தார். இருப்பினும், ''இந்திய அரசியல் அமைப்பு கீழ், வாட்ஸ் அப் போன்ற தனியார் நிறுவனங்களை அணுக முடியாது'' என சுப்ரீம் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.
மேலும் நீதிபதிகள் கூறியதாவது: இன்றைய உலகில் டிஜிட்டல் தொடர்பு மிக முக்கயமானது. பயனர்கள் ஒரு சமூக வலை தளத்தின் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும். தனியாருக்கு சொந்தமான சேவைகளுக்கு உரிமை கோர முடியாது, என தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, ''வாட்ஸ் அப் பயன்பாடு அடிப்படை உரிமை அல்ல, உள்நாட்டு தயாரிப்பான ஸோகோவின் அரட்டை செயலியை பயன்படுத்துங்கள்'' என மனுத்தாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பின்னர் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கவனம் ஈர்த்தது!
தற்போது, சுதேசி செயலியான அரட்டைக்கு வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு மத்தியில், சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பரிந்துரைத்து இருந்து பல்வேறு தரப்பினர் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த செயலி சமீபத்தில் இந்தியாவின் ஆப் ஸ்டோர்களில் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் மற்ற சமூகவலைதளங்களை விஞ்சி முதலிடத்தைப் பிடித்தது.
2021ம் ஆண்டு தொடங்கப்பட்ட, அரட்டை செயலி தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. உள்நாட்டு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த குடிமக்களை வலியுறுத்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உட்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் வலியுறுத்தலுக்கு பிறகு, அரட்டை செயலுக்கு மவுசு கூடியது.