ADDED : ஜூலை 07, 2026 05:59 PM

கோவை: எந்த பத்திரிகையிலும் என் பேட்டி வெளியாகவில்லை. பேட்டி கொடுப்பதே வீண் என ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, கோவை மாவட்டம் அன்னுார் வந்தார். அவருக்கு ம.தி.மு.க., - த.வெ.க., மற்றும் காங்., சார்பில் சாலை அணிவித்து, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் அத்திக்கடவு முதல் திட்டத்தில் விடுபட்டு விட்டன. இரண்டாம் திட்டத்திற்கு ஆய்வு முடிக்கப்பட்டு திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இரண்டாம் திட்டத்தை இதுவரை துவங்கவில்லை.
இந்தத் திட்டம் துவங்குவதற்கு தமிழக அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனக்கோரி, வைகோவிடம் ம.தி.மு.க., நிர்வாகிகள் மனு அளித்தனர். பத்திரிகையாளர்கள், வைகோவிடம் பேட்டி தரும்படி கேட்டபோது, ''நேற்று முன்தினம் முக்கால் மணி நேரம் அனைத்து ஊடகங்களுக்கும் பேட்டி அளித்தேன்.
ஆனால், எந்த பத்திரிகையிலும் என் பேட்டி வெளியாகவில்லை. பேட்டி கொடுப்பதே வீண்,'' என, ஆதங்கத்துடன் தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார்.
