ADDED : ஜன 06, 2026 07:48 AM

திருவள்ளூர்: அரசு வழங்கிய இலவச பட்டாவை ஆன்லைனில் ஏற்ற 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் எடையார்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேல், 35. இவர் திருவள்ளூர் மாவட்டம் குமாரசேரி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் திருவேற்காடு பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி குமார சேரி பகுதியைச் சேர்ந்த, 12 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
இந்த பட்டாவை ஆன்லைனில் ஏற்ற வேண்டுமென பட்டா பெற்ற மக்கள் குமாரசேரி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவேலுவை அணுகியபோது, அவர் தலா ஒருவருக்கு 3,000 ரூபாய் தரவேண்டுமென கேட்டுள்ளார். இதையடுத்து 11 பேர் பணத்தை கொடுத்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 51 என்பவர் பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். பின் 2,000 ரூபாய் கொடுக்க சம்மதித்தார்.
இது குறித்து சிவகுமார் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி நேற்று சிவகுமார் மூலம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ., ஆனந்தவேலுவிடம் 2,000 ரூபாய் அளிக்க முயன்ற போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜெய குமார் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

