துர்கா பூஜை பந்தலில் 'வாடிகன் சர்ச்' விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு
துர்கா பூஜை பந்தலில் 'வாடிகன் சர்ச்' விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு
ADDED : செப் 27, 2025 02:57 AM

ராஞ்சி : ஜார்க்கண்டில், துர்கா பூஜை பந்தல் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமான வாடிகன் சர்ச் போன்று அமைக்கப்பட்டதற்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வடமாநிலங்களில் துர்கா பூஜை நாளை துவங்கி அக்., 2 வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் புனித நகரமான வாடிகன் நகர சர்ச் தோற்றத்தில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு வி.எச்.பி., எனப்படும், 'விஷ்வ ஹிந்து பரிஷத்' கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து வி.எச்.பி.,யின் தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியதாவது:
வாடிகன் நகர் கருப்பொருளில் ராஞ்சியில் நிறுவப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல், ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளது. பந்தல் அமைப்பு குழு மதசார்பின்மையில் ஆர்வம் காட்டியிருந்தால், அவர்கள் சர்ச் அல்லது மதரசாக்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஹிந்து கடவுள்கள் அல்லது தேவியர் புகைப் படத்தை காட்சிப்படுத்த வேண்டும்.
வாடிகன் சர்ச் மற்றும் மியூசியம் தோற்றத்தில், அமைக்கப்பட்டுள்ள துர்கா பூஜை பந்தல், ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதுடன் மதமாற்றத்தையும் ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பன்சாலின் இந்த குற்றச்சாட்டை துர்கா பூஜை பந்தலை அமைத்துள்ள ஆர்.ஆர்.ஸ்போர்ட்ஸ் கிளப் மறுத்துள்ளது.
அந்த அமைப்பின் நி ர்வாகி விக்கி யாதவ் கூறுகையில், ''கடந்த 50 ஆண்டுகளாக துர்கா பூஜை பந்தல் அமைத்து வருகிறோம். மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் கடந்த 2022ல் அமைக்கப்பட்ட வாடிகன் நகர கருப்பொருளை மையப்படுத்தி, இப்போது பந்தல் அமைத்து உள்ளோம்.
''துர்கை பின்னணியில் வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சர்ச் பந்தலில் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கட்டாவில் வரவேற்பை பெற்ற இந்த கருப்பொருளில் அமைத்துள்ள பந்தலுக்கு ராஞ்சி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்,'' என்றார்.