மாணவர்களை மேம்படுத்துவதில் தேசிய கல்விக் கொள்கைக்கு முக்கிய பங்கு; துணை ஜனாதிபதி சி.பி.ஆர்., பெருமிதம்
மாணவர்களை மேம்படுத்துவதில் தேசிய கல்விக் கொள்கைக்கு முக்கிய பங்கு; துணை ஜனாதிபதி சி.பி.ஆர்., பெருமிதம்
UPDATED : நவ 09, 2025 09:10 PM
ADDED : நவ 09, 2025 09:04 PM

பெங்களூரு: மாணவர்களை மேம்படுத்துவதில் தேசிய கல்விக் கொள்கை முக்கிய பங்கு வகித்துள்ளது என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் 16வது பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மொத்தம் 2,925 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பட்டங்களை வென்ற மாணவர்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு பட்டதாரியும் தங்கள் தனித்துவமான திறமைகளை அடையாளம் கண்டு, இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். இலக்குகளை அடையும் வரை சவால்களை விடாமுயற்சியுடன் எதிர்கொள்ள வேண்டும். பல்துறை கற்றல் மூலம் மாணவர்களை மேம்படுத்துவதில் தேசிய கல்விக் கொள்கை முக்கிய பங்கு வகித்துள்ளது. சமூக ஊடகங்களை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டும்.
இளம் பட்டதாரிகள் சுய ஒழுக்கத்தைப் பேண வேண்டும். பெற்றோர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். பட்டதாரிகள் எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேசினார்.
சாமி தரிசனம்
கர்நாடக மாநிலம் மேலுகோட்டில் உள்ள நாராயண சுவாமி கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வழிபாடு நடத்தினார். ஸ்ரீ சாமுண்டேஸ்வரி கோவிலிலும் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு செய்தார். முன்னதாக கர்நாடகா வந்த அவரை பெங்களூரு விமான நிலையத்தில் கர்நாடக கவர்னர் கெலாட், மத்திய அமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

