வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை கவலைக்குரிய விஷயம்; இந்தியா கண்டனம்
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை கவலைக்குரிய விஷயம்; இந்தியா கண்டனம்
ADDED : டிச 26, 2025 05:53 PM

புதுடில்லி: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயமாகும் என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிருபர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பு, உரிமைகள் உரிமைகளை உறுதி செய்வதற்கும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் வங்கதேச அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
அமெரிக்க விசா விண்ணபிக்கும் போது சிரமங்களை எதிர்கொள்ளும் இந்தியர்களிடமிருந்து மத்திய அரசு பல முறையீடுகளைப் பெற்றுள்ளது. விசா விவகாரங்கள் வழங்கும் நாட்டின் இறையாண்மையின் கீழ் வந்தாலும், இந்திய அதிகாரிகள் மற்றும் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் இது குறித்து பேசி இருக்கின்றனர்.
இந்த தாமதங்கள் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு கல்வியில் இடையூறுகள் உட்பட நீண்ட கால சிரமங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பிரச்னையைத் தீர்க்கவும், இந்திய நாட்டினருக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் அமெரிக்கா உடன் இந்தியா தீவிரமாக பேச்சு நடத்தி வருகிறது.
பொறுப்பு
வங்கதேசத்தில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை இந்தியா ஆதரிக்கிறது. வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராக முன்வைக்கப்படும் தவறான குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம். மேலும் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பைப் பராமரிப்பது வங்கதேச இடைக்கால அரசின் பொறுப்பு. வங்கதேசத்தில் நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பவுத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை கவலை அளிக்கிறது.
கண்டிக்கிறோம்
சமீபத்தில் மைமென்சிங்கில் ஒரு ஹிந்து இளைஞர் கொல்லப்பட்டதை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இடைக்கால அரசின் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான 2,900 க்கும் மேற்பட்ட வன்முறை சம்பவங்கள் ஆதாரங்களால் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சம்பவங்களை வெறும் ஊடக மிகைப்படுத்தல்கள் என்று ஒதுக்கித் தள்ளவோ அல்லது அரசியல் வன்முறை என்று நிராகரிக்கவோ முடியாது. இவ்வாறு ரந்தீர் ஜெயிஸ்வால் கூறினார்.

