அடையாள அரசியலை ஒழித்து கட்டுங்கள்; டிரம்ப் கட்சியினருக்கு விவேக் ராமசாமி எச்சரிக்கை
அடையாள அரசியலை ஒழித்து கட்டுங்கள்; டிரம்ப் கட்சியினருக்கு விவேக் ராமசாமி எச்சரிக்கை
ADDED : நவ 05, 2025 05:22 PM

வாஷிங்டன்: 'அடையாள அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இது குடியரசுக் கட்சிக்கு பொருந்தாது,' என்று அமெரிக்காவில் நடந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர் விவேக் ராமசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கவர்னர், அட்டர்னி ஜெனரல் உள்ளிட்ட பதவிகளுக்கு நடந்த தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வி குறித்து பேசிய டிரம்பின் ஆதரவாளரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி, குடியரசு கட்சிக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது; நியூ ஜெர்சி, வர்ஜீனியா மற்றும் நியூயார்க் நகரத்தில் நமக்கு தோல்வி கிடைத்துள்ளது. ஜனநாயக கட்சியினர் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தலின் மூலம் குடியரசுக் கட்சியினருக்கு இரு முக்கிய பாடங்கள் கிடைத்துள்ளன. முதலாவது, வாழ்வாதார செலவைக் குறைத்து, அமெரிக்க மக்களின் கனவை மீண்டும் எட்டக்கூடியதாக மாற்ற வேண்டும். மின்சாரம், மளிகை சாமான்கள், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வீடுகள் ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க வேண்டும். அதை நாம் எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம் என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.'
இரண்டாவதாக, அடையாள அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இது குடியரசுக் கட்சிக்கு பொருந்தாது. அது இடதுசாரிகளின் விளையாட்டு. உங்கள் தோல் நிறம் அல்லது மதம் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. உங்கள் குணாதிசயங்களே, நாம் யார் என்பதை வரையறுக்கிறது,
இவ்வாறு அவர் கூறினார்.
முன்பு அதிபர் தேர்லில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, அடுத்தாண்டு மே 5ம் தேதி நடக்கும் ஓஹியோ மாகாணத்தின் கவர்னர் பதவிக்கு போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

