வாக்காளர் பட்டியல் திருத்தம் - 6.16 கோடி விண்ணப்பங்கள் விநியோகம்: மாநில தேர்தல் அதிகாரி
வாக்காளர் பட்டியல் திருத்தம் - 6.16 கோடி விண்ணப்பங்கள் விநியோகம்: மாநில தேர்தல் அதிகாரி
ADDED : நவ 24, 2025 04:56 PM

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 6.16 கோடி பேருக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி(எஸ்ஐஆர்) தொடர்பாக மாநில கட்சிகளுடன் சென்னையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 50 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளன. அந்த படிவங்களை கணினிமயமாக்கும் பணி நடந்து வருகிறது.
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 68,647 பேர் உள்ளிட்ட 2.45 லட்சம் பேர் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் தான் அதிகமான ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்சி மட்டுமே படிவங்களை சேகரிக்கிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன்அனைத்து தரப்பினரம் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய அவகாம் வழங்கப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு விடுபட்டவர்கள் கண்டிப்பாக சேர்க்கப்படுவார்கள். ஆன்லைனில் படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கணக்கீட்டு படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படமாட்டாது. யாருடைய பெயரும் காரணமின்றி நீக்க முடியாது, நீக்கப்பட்டால் கண்டிப்பாக காரணம் தெரிவிக்கப்படும். தகுதியற்ற காரணங்களினால், வாக்காளர்கள் நீக்கப்பட மாட்டார்கள். இறந்தோர், இடம்பெயர்ந்தோர், படிவம் திருப்பித் தராதோர் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

