ADDED : அக் 30, 2025 05:16 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான பயிற்சி துவங்கி உள்ள நிலையில், பாதுகாப்பு குறைபாட்டால், அதில் பங்கேற்க ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
பாதுகாப்பை மேம்படுத்தக் கோரி, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் உடன் சேர்த்து, இம்மாநிலத்துக்கும் அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
விரைவில் தேர்தல் நடக்கவுள்ள பீஹாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், குஜராத், கோவா, ராஜஸ்தான் உட்பட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நவ., 4 - டிச., 4 வரை நடக்க உள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல், டிச., 9ல் வெளியாக உள்ள நிலையில், 2026 பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. இந்த பணிக்காக, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று துவங்கியது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு குறைபாடால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பங்கேற்க, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
பாதுகாப்பை மேம்படுத்தக் கோரி, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கூறியதாவது:
ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில், அரசியல் கட்சிகளால் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் துன்புறுத்தப்பட்டு உள்ளனர்; மிரட்டலுக்கும் ஆளாகி உள்ளனர்.
இந்த சூழலில், சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட உள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம்.
மேற்கு வங்கத்தில் இந்த பணியை நிறுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
களத்தில் பணியாற்றும் நாங்கள் தான் அச்சுறுத்தலை எதிர்கொள்கிறோம். குறிப்பாக, பெண் அலுவலர்களின் நிலை பற்றி கவலைப்படுகிறோம்.
எனவே, அரசியல் ரீதியாக பதற்றம் நிறைந்த பகுதிகளில் துணை ராணுவப் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும். மேலும், பெண் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அதிகளவில் பெண் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலவரப்படி, 80,681 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளனர். இவர்களில், 1,000 பேர், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பங்கேற்க மாட்டோம் என, கடந்த மாதத்தில் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி உள்ளனர். தற்போது அவர்களிடம் விளக்கம் கேட்டு, தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

