உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சரி பார்க்க இப்படி செய்யுங்கள்
உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளதா? சரி பார்க்க இப்படி செய்யுங்கள்
ADDED : டிச 19, 2025 08:35 PM

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் பெயர்கள் சரியாக உள்ளதா? பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சில வழிமுறைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளான எஸ்ஐஆர் முடிந்து இன்று (டிச.19) அதிகாரப்பூர்வமாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த கலெக்டர்கள் இந்த பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை கீழ்க்கண்ட வழி முறைகள் மூலம் சரிபார்த்து அறிந்து கொள்ளலாம்.
• voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்தினுள் செல்ல வேண்டும்.
• சம்பந்தப்பட்ட நபரின் வாக்காளர் அடையாள அட்டை எண்(EPIC) உள்ளீடு செய்ய வேண்டும். வாக்காளர் பெயர், அவரின் வயது மற்றும் எந்த தொகுதி என்ற விவரங்களையும் உள்ளீடு செய்யலாம்.
• தேடல் என்ற பட்டனை க்ளிக் செய்து உங்கள் வாக்காளர் விவரங்களை அறியலாம்.
• திரையில் உங்கள் பெயர் இருந்தால், அதிகாரப்பூர்வ வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளது என்று அர்த்தமாகும். (சில தொகுதிகளில் கடந்த முறை ஓட்டுப்போட்டு ஓட்டுச்சாவடிகள் மாறி இருக்கும். அதையும் அறிந்து கொள்ளலாம்)
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன?
* வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அதற்கான காரணங்கள் குறித்து திருப்தி இல்லை என்றால், ஏதேனும் ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் ஜன.18ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
• ஏற்கனவே (கடந்த முறை) வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று தற்போது இடம்மாறியவர்கள் படிவம் எண் 8, புதியதாக சேர்ப்பவர்கள் படிவம் எண் 6 ஆகியவற்றை உரிய முறையில் பூர்த்தி செய்து, அதற்கான ஆவணங்களை வழங்கி ஜன.18க்குள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
அனைத்து செயல்முறைகளும் நிறைவு பெற்ற பின்னர், 2026ம் ஆண்டு பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியலில் பெயர் உள்ளவர்களே, 2026 சட்டசபை தேர்தலில் ஓட்டு போட, தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள் ஆவர்.

