வாக்காளர்கள் விளக்கம் கொடுக்க தயாரில்லை; தேர்தல் கமிஷனால் தொடர்கிறது குழப்பம்
வாக்காளர்கள் விளக்கம் கொடுக்க தயாரில்லை; தேர்தல் கமிஷனால் தொடர்கிறது குழப்பம்
ADDED : டிச 30, 2025 06:07 AM

சென்னை: ஆவணங்கள் கேட்டு, தேர்தல் கமிஷன், 'நோட்டீஸ்' அனுப்பி வரும் நிலையில், பெரும்பாலான வாக்காளர்கள், விளக்கம் கொடுக்க தயாராக இல்லாததால், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் குழப்பம் தொடர்கிறது.
தமிழகத்தில், மூன்று மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை, இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இதற்காக வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து, 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். தற்போது, 5.43 கோடி வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். கணக்கெடுப்பு பணியை, பல இடங்களில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முறையாக மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் அரசியல் கட்சிகளின் ஏஜன்டுகளிடம் விண்ணப்பங்கள் மொத்தமாக வழங்கப்பட்டன. அவர்களிடம் அரைகுறையாக பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதனால், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பெயரும், பட்டியலில் இடம் பெற்றது. மொத்தம், 12.43 லட்சம் வாக்காளர்கள், போதிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை. தகுதியான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்றால், அவர்களையும் நீக்கவேண்டிய கட்டாயம் தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, அவர்கள் உரிய ஆவணங்களை, பிப்.,10ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணி நடந்து வருகிறது. தேர்தல் அலுவலர்கள் நிர்ணயிக்கும் நாளில், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தேர்தல் கமிஷன் நோட்டீசை பெற்ற வாக்காளர்களில் பெரும்பாலானோர், விளக்கம் கொடுக்க தயாரில்லை.
இது குறித்து, வாக்காளர்கள் சிலர் கூறியதாவது:
விண்ணப்ப படிவத்தில், 2002, 2005ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில், எந்த ஊரில் பெயர் இருந்தது என்று தெரியாததால், விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அதை ஏற்க முடியாது என்றால் நிராகரித்திருக்கலாம். நாங்கள் சிறப்பு முகாமில், புதிதாக விண்ணப்பம் அளித்திருப்போம். தற்போது நோட்டீஸ் பெற்று, உதவி தேர்தல் அலுவலர் அலுவலகம் சென்றால், அவர் இல்லை பிறகு வாருங்கள் என்று அலைக்கழிக்கின்றனர்.
இதன் காரணமாகவே, பலர் விளக்கம் அளிக்காமல், புதிதாக விண்ணப்பம் கொடுக்கின்றனர். ஏராளமானோர் விண்ணப்பம் கொடுக்கும் நிலையில், தேர்கல் கமிஷன் முறையாக கள ஆய்வு செய்து, தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் குழப்பம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

