இருமல் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதா? கேட்கிறது உலக சுகாதார அமைப்பு
இருமல் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதா? கேட்கிறது உலக சுகாதார அமைப்பு
UPDATED : அக் 08, 2025 07:47 PM
ADDED : அக் 08, 2025 07:39 PM

புதுடில்லி : மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என இந்தியாவிடம் ஐக்கிய நாடுகள் சபை கேள்வி எழுப்பி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், 1 முதல் 7 வயது வரை உள்ள 14 குழந்தைகள், அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தனர். திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு, உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதற்கான காரணம் குறித்து, அம்மாநில அரசு விசாரித்த போது, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், 'ஸ்ரீசன் பார்மா' என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து, மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 'நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.' மருந்துகள் காரணம் என்பது தெரியவந்தது. இறந்த குழந்தைகளின் சிறுநீரக திசுவில், 'டை எத்திலீன் கிளை சால்' என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்தது தெரியவந்தது. 'பெயின்ட், மை' போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருந்தது. இதையடுத்து, மத்திய பிரதேச அரசு, அம்மருந்து நிறுவனத்தை சோதனை செய்து, நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.
இதனையடுத்து அந்த மருந்துக்கு தமிழகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, உ.பி., ஜார்க்கண்ட், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த மருந்தை சாப்பிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 குழந்தைகள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்தது. இந்த சம்பவத்தில் பிரவின் சோனி என்ற டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கண்டனம்
ஆனால், இதற்கு கண்டனம் தெரவித்துள்ள அகில இந்திய மருத்துவர்கள் சங்கம், மருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்காமல், டாக்டர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மருந்து தொடர்பான விதிமுறைகளை வகுப்பதில் அமைப்பு ரீதியாக மாநிலத்தில் பிரச்னை உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக, மருந்து ஆய்வாளர்கள், உணவு மற்றும்மருந்து நிற்வாக துணை இயக்குநர் உள்ளிட்ட சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மோகன் யாதவ் கூறியுள்ளார்.
இந்நிலையில், குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிப் என்ற மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது. இதற்கு இந்திய அரசு அளிக்கும் பதிலை வைத்து, மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சீல்
இதனிடையே, இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் கிளை ஆலை காஞ்சிபுரம் மாவட்டம் சுக்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.